பாமகவை ஒரு கட்சியாகவே பொருட்படுத்துவதில்லை- எடப்பாடி பழனிசாமி
பாமகவை ஒரு கட்சியாகவே பொருட்படுத்துவதில்லை என்று செய்தியாளர்கள் சந்திப்பில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக பேசினார்.

சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “காவிரி பிரச்சனைக்காக, எங்கள் கூட்டணி கட்சியின் ஆட்சி நடந்தாலும் பரவாயில்லை என சொல்லி 22 நாட்கள் நாடாளுமன்றத்தை முடக்கினோம். அதுபோல நீட் ரத்து கோரி 1 நாள் நாடாளுமன்றத்தை திமுகவால் முடக்க முடிந்ததா? நீட் தேர்வு தொடர்பாக கவர்ச்சிகரமான வாக்குறுதி கொடுத்து ஏமாற்றி ஆட்சிக்கு வந்தது திமுக. ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து நீட் என்று சொன்ன திமுக தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறது?
காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகிறது. உச்சநீதிமன்றத் தீர்ப்பை கர்நாடக அரசு அமல்படுத்த வேண்டும். பெங்களூருவில் கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றிருக்க கூடாது. முதலமைச்சருக்கு விவசாயிகளை பற்றி கவலை இல்லை. நஷ்டம் ஏற்பட்டுள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பை கர்நாடகா காங்கிரஸ் மதிக்கவில்லை. அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற மாட்டோம் என்று அன்புமணி சூசகமாக தெரிவித்துள்ளார். பாமகவை ஒரு கட்சியாகவே பொருட்படுத்துவதில்லை” எனக் கூறினார்.