தேர்தல் நேரத்தில் திமுக கூட்டணி கட்சிகள் அதிமுக கூட்டணியில் சேரும்- ஜெயக்குமார்
சமூகநீதிக்கும், திமுகவுக்கும் என்ன தொடர்பு உள்ளது, சமூகநீதி குறித்து பேச திமுகவினருக்கு தகுதி இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “விஜயின் அரசியல் பயணம் பற்றி செல்லூர் ராஜூ கூறியது அவரது தனிப்பட்ட கருத்து. அடுத்த தலைமுறை விஜய்தான் என செல்லூர் ராஜூ ஏன் பேசினார் என நான் தொலைபேசியில் அவரிடம் விசாரிக்கிறேன். வேங்கை வயல் சம்பவம் நடைபெற்று இவ்வளவு காலம் ஆகியும் தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வேங்கைவயல் சம்பவத்தில் நிர்வாக திறனற்ற விடியா திமுக அரசு இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்? சமூகநீதிக்கும், திமுகவுக்கும் என்ன தொடர்பு உள்ளது, சமூகநீதி குறித்து பேச திமுகவினருக்கு தகுதி இல்லை. அம்மா மினி கிளினிக் திட்டத்தை நகர்ப்புற நல்வாழ்வு மையம் என பெயர் மாற்றியுள்ளது. விடியா திமுக அரசு அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிவருகிறது.
தேர்தல் நேரத்தில் திமுக கூட்டணி கட்சிகள் அதிமுக கூட்டணியில் சேரும். நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமையும். நாடாளுமன்ற தேர்தலில் விடியா திமுக அரசுக்கு தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். திமுக ஆட்சி விரைவில் கலையும்.. ஆட்சி கலைந்தால் மக்கள் சந்தோஷப்படுவார்கள்.” என்றார்.