பாஜகவின் செயல் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போலாகிறது – ஜெயக்குமார்
ஈபிஎஸ் உருவபொம்மையை எரித்தவரை இடைநீக்கம் செய்தது கண் துடைப்பா? என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “எடப்பாடி படத்தை எரித்தவர்களை நீக்கிவிட்டு மீண்டும் சேர்த்துக்கொண்ட பாஜகவின் செயல்பாடு கண்டிக்கதக்கது. குழந்தையையும் கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டிவிடும் செயலில் பாஜக ஈடுபட்டு வருகிறது, அதிமுகவை சீண்டினால் எதிர்வினை அதிகமாக இருக்கும். பாஜகவின் செயல் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போலாகிறது. ஈபிஎஸ் உருவபொம்மையை எரித்தவரை இடைநீக்கம் செய்தது கண் துடைப்பா?
தமிழ்நாட்டில் திமுக எம்.பி-க்கே பாதுகாப்பு இல்லாதபோது மக்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும்? திருச்சி காவல்நிலையத்தில் புகுந்தே திமுகவினர் தாக்குதல் நடத்துகின்றனர். குரங்கு கையில் சிக்கிய பூமாலை போல திமுக ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சிக்கி தவிக்கிறது. மு.க.ஸ்டாலின் கட்டுப்பாட்டில் ஆட்சியும் இல்லை, கட்சியும் இல்லை. நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறோம். ஈரோடு கிழக்கு தேர்தல் வெற்றி நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்காது. நீட்டை ஒழிக்கிறோம், அதற்கான ரகசியம் எங்களுக்கு மட்டும் தான் தெரியும் என்றார். 22 மாதங்களுக்குப் பிறகும் ரகசியம் சொல்லாமல் மக்களை ஏமாற்றுகின்றனர்” என்றார்.