ஓபிஎஸ் இம்சை அரசன் – ஜெயக்குமார் விமர்சனம்
இம்சை அரசன் 23ம் புலிகேசி ஓ.பன்னீசெல்வத்தின் தொல்லை இங்க விட்டு கர்நாடகாவிலும் தொடர்கிறது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை ராயபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “விடியா திமுக அரசு மக்கள் நலனில் ஒருபோதும் அக்கறை கொண்டதில்லை. திமுக அரசு பொய் ஒன்றையே மூலதனமாக வைத்து ஆட்சி நடத்திவருகிறது. தாத்தா, அப்பாவுக்கு சளைத்தவர் அல்ல உதயநிதி என்பதை திமுக அமைச்சரே ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். 30 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து சேர்ப்பு தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி பறிமுதல் செய்ய வேண்டும். உதயநிதி, சபரீசனை காவலில் எடுத்து விசாரணை நடத்த வேண்டும்.
இம்சை அரசனைபோல கர்நாடகாவிலும் பன்னீர் தொல்லை தருகிறார். சசிகலா, டிடிவி தினகரன், பன்னீரை தவிர யார் வேண்டுமானாலும் அதிமுகவுக்கு திரும்பலாம். கொள்கை அடிப்படையில் அல்ல கூட்டணி என்ற அடிப்படையில் பாஜகவுடன் உறவு தொடர்கிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர்கெட்டுள்ளது. காவல்துறை சுதந்திரமாக செயல்பட முடியவில்லை” என தெரிவித்தார்.