அண்ணாமலையை பார்த்து அதிமுக பயந்துவிட்டதா? செல்லூர் ராஜூ பதில்
டி.ஐ.ஜி தற்கொலை செய்து கொண்டிருக்கிறது உண்மையிலேயே மன வேதனையை ஏற்படுத்துகிறது. சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் என மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரை கோரிப்பாளையம் அதிமுக மாநகர் கட்சி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் ஆகஸ்ட் 20ஆம் தேதி நடைபெற உள்ள அதிமுகவின் மாநாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ, “எடப்பாடி ஆட்சி காலத்தில் நீட் தேர்வில் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதன் கீழ் கடந்த மூன்று ஆண்டுகளில் 1500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மருத்துவத்தை தற்பொழுது பயின்று வருகின்றனர். மாணவராக சென்று டாக்டராக வெளியே வருகின்றனர். அதிமுகவில் தொடர்ச்சியாக இளைஞர்கள் அலை அலையாக சேர்ந்து வருகின்றனர். அதிமுகவின் மாநாடு ஒரு வரலாறு அமைய இருக்கிறது. கட்சி துவங்கிய காலத்தில் இது ஒரு நடிகரின் கட்சி 50 நாள் கூட நீடிக்காது என்று எல்லாம் பேசினார்கள். ஆனால் இன்று 50 ஆண்டுகளை நிறைவு செய்து தமிழ்நாட்டை அதிக காலம் ஆட்சி செய்த கட்சியாக தற்போது பொன் விழா மாநாடு கொண்டாட இருக்கிறது.
அதிமுக தொண்டர்களின் எழுச்சியோடு உணர்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் அதிமுக மாநாடு அமைய இருக்கிறது. தொகுதிக்கு 25 ஆயிரம் வீதம் அதிமுக மாநாட்டில் பங்கேற்க ஏற்பாடு செய்து வருகிறோம். மதுரையில் மற்றொரு சித்திரை திருவிழா காண இருக்கிறோம். அதிமுகவில் தற்பொழுது வரை மதுரையில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் பேர் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டு உள்ளனர். தக்காளி விலை உயர்ந்ததால் மக்கள் தக்காளியை மறந்து போய் உள்ளனர். அதிமுக ஆட்சிக் காலத்திலும் காய்கறி விலை ஏற்றம் இருக்கும். ஆனால் அதனை சமாளிக்க முன்கூட்டியே திட்டம் வகுப்போம்.
மதுரையின் மைந்தனாக இருக்கக்கூடிய பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஏதோ ஒரு மூலையில் இருக்கிறார், அவரை கண்டுபிடிங்கள். அதிமுக மட்டுமே ஜனநாயகத்தின் படி இயங்கும் ஒரே கட்சி. இங்குதான் ஏழை பணக்காரன் சாதி, மத வேற்றுமை கிடையாது. அனைவரும் உயர் பொறுப்புக்கு வர முடியும். குறிப்பாக தனபால் சபாநாயகராக அமர்த்தப்பட்டார். “திரெட்” என்ற சமூக வலைதளம் வந்திருப்பதாக கூறி இருக்கிறீர்கள். ஆலோசனை செய்து விட்டு அதில் சேர்வது குறித்து பார்க்கலாம்.
அண்ணாமலையை பார்த்து அதிமுக பயந்துவிட்டது என விழுப்புரத்தைச் சேர்ந்த அதிமுக கட்சி நிர்வாகி பேசியுள்ளார். எவனைப் பார்த்தும் அதிமுகவினர் பயப்பட மாட்டோம். எங்கள் தலைவர் தொண்டையிலேயே குண்டை வைத்து கட்சியை நடத்தியவர். எவனுக்கும் அதிமுகவினர் பயப்பட மாட்டோம். கண்டவன் பேசியதற்கு எல்லாம் நாங்கள் பதில் சொல்ல வேண்டியதும் இல்லை. ஒரு காவல்துறை உயர் பொறுப்பில் இருக்கும் டி.ஐ.ஜி தற்கொலை செய்து கொண்டிருக்கிறது உண்மையிலேயே மன வேதனையை ஏற்படுத்துகிறது. அவரது தற்கொலை குறித்து உரிய சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும்” என்றார்.