ஓபிஎஸ் உடன் தினகரனை சந்திக்க செல்லாதது ஏன்?- வைத்திலிங்கம் விளக்கம்
முன்னாள் முதலமைச்சர் என்ற பதவிக்கு உண்டான பண்பு எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை என வைத்திலிங்கம் விமர்சித்துள்ளார்.
நேற்று சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “ஓபிஎஸ் ,டிடிவி தினகரன் சந்திப்பானது காலியான கூடாரத்தில் ஒட்டகம் புகுந்ததை போன்றது. கிளைச்செயலாளர்களுக்கு இருக்கும் தகுதி கூட பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு கிடையாது. வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகரன் ஆகியோர் ஓபிஎஸ்-ஐ கைவிட்டு விட்டனர்” எனக் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இதற்கு பதில் அளித்துள்ள ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம், “ஓ.பி.எஸ்-ஐ மண் குதிரை என ஈபிஎஸ் விமர்சித்திருக்கிறார். மாயமான், மண் குதிரை இல்லையென்றால் ஈ.பி.எஸ் முதலமைச்சராக ஆகியிருக்க முடியாது. ஈ.பி.எஸ் எதற்கும் உதவாத சண்டிக்குதிரை. ஜெயக்குமார் ஒரு விளையாட்டுப் பிள்ளை. அவரைப் பற்றி கருத்துக்கூற நான் விரும்பவில்லை. ஈபிஎஸ்-க்கு 2% வாக்கு கூட இல்லை. டிடிவி- ஓபிஎஸ் முதன்முதலில் சந்திக்கிறார்கள். எனவேதான் மூத்த தலைவர்கள் மட்டும் செல்லட்டும், கும்பலாக செல்லவேண்டாம் என நான், கு.ப. கிருஷ்ணன் ஆகியோர் சேர்ந்து பேசிதான் செல்லவில்லை. ஒன்றுபட்டால்தான் உண்டு வாழ்வு என்பதை சிந்தித்தால் இன்று டிடிவி தினகரனுடன் சேர்ந்துள்ளோம்” என்றார்.