‘‘அதிமுக பல அணிகளாக பிரிந்து கிடக்கிறது. அதற்கு காரணம் எடப்பாடி பழனிசாமியின் தன்னலமும், பிடிவாதமும் எதேச்சிகாரப்போக்கும். அவருக்கு இந்த உயரிய பதவியை பெற்றுக் கொடுத்தவர்களையே உதாசீனப்படுத்தியதால் தொடர்ச்சியாக பத்து தோல்விகளை கண்டுவிட்டார். அதிமுக என்கிற ஆலமரத்தையே அடியோடு சாய்த்து வருகிறார். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் நேற்று முளைத்த கட்சிகளுடன் கூட்டணி சேர பிரயத்தனம் காட்டி வரும் அவர், அதிமுகவின் ஆணி வேர்களாக இருந்த ஆளுமைகளை ஒன்றிணைத்து வெற்றிபெற முயற்சிக்கவில்லை’’ என்கிற ஆதங்கத்தை பிற கட்சியினரும் கூட வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அதிமுக ஒன்றிணைந்தால் அதன் பலன் என்ன? என்பதை வலுவாக உணர்த்தி வருகிறார் அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது எம்.ஜி.ஆர், நமது அம்மா செய்தி ஆசிரியர் மருது அழகுராஜ்.
தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து விவரித்துள்ள அவர், ‘‘திமுக கூட்டணி குறைந்த பட்சம் 35 சதவீத வாக்குகளை பெற்றாலும் கூட எஞ்சியுள்ள 65 சதவீதத்தை ‘எடப்பாடி திமுக’ மற்றும் பாஜக தலைமையிலான NDA கூட்டணி அத்துடன் விஜயின் த.வெ.க. கூட்டணி இவற்றோடு சீமான் மற்றும் நோட்டா ஆகியோர் பல திசைகளிலும் பிரிக்கும் வாக்குகளால் திமுகவே மீண்டும் ஆட்சியை தக்க வைக்கும் சூழலே உருவாகும்.
ஒருவேளை ஒன்றுபட்ட அதிமுக உருவாகி அது பா.ஜ.க தலைமையிலான NDA-யுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும், அன்றைய மக்கள் நலக்கூட்டணி போல விஜய் தலைமையில் அமையும் கூட்டணி களம் புகுந்து திமுக வாக்குகளில் பெரும் சேதாரத்தை ஏற்படுத்தினால் மட்டுமே ஆட்சி மாற்றத்துக்கான வாய்ப்பு உருவாகும்.
இது, இலங்கை அணி, பாகிஸ்தானிடம் தோற்று, பாகிஸ்தான் அணி, ஜிம்பாப்வேவிடம் தோற்றால் ஃபைனலில் பங்களாதேசத்தை ஜெயித்து நாம் எளிதாக கோப்பையை கொய்து விடலாம் என்கிற கிரிக்கெட் பிரியர்களின் நப்பைசையை போன்றதே.
ஆக மக்களிடம் கசந்து நிற்கும் திமுக தனது கூட்டணியை தக்க வைப்பதன் மூலமும் பிளந்து கிடக்கும் எதிர்கட்சி மற்றும் சிதறிக் கிடக்கும் அதன் திமுகவின் எதிர் வாக்குகளாலும் மீண்டும் ஒரு வசந்த காலத்தை வரவு வைத்துக் கொள்ளும் வாய்ப்பு திமுக வுக்கு இன்றளவில் பிரகாசமாக இருக்கிறதே என்பதே நிஜம்.
ஆனாலும் தேர்தலுக்கு ஏறத்தாழ 16 மாதங்கள் இருப்பதால் திமுகவின் வாய்ப்பு என்பது கடைசி நேர மாறுதல்களுக்கு உட்பட்டதே’’ என அவர் தெரிவித்துள்ளார்.