கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவங்களில் பெரும் சந்தேகம் எழுந்துள்ளது. அதனால் அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்த வேண்டும் என்று பீட்டர் அல்போன்ஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து ஊடகங்கள் வாயிலாக அவர் பேசியதாவது, சட்டசபை கூடும் நாளில் இந்த சம்பவம் ஏன் நடக்க வேண்டும்? நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 40 க்கு 40 இடங்களில் வெற்றி பெற்றப் பின்னர் திட்டமிட்டு இந்த சம்பவம் உருவாக்கப்பட்டதோ என்ற சந்தேகம் எழுந்திருப்பதாகவும் இது குறித்து எல்லா கோணங்களிலும் விசாரணை ஆணையம் விசாரிக்க வேண்டுமென தமிழக சிறுபான்மை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில் நடந்த விஷ சாராய சாவுகள் மிகுந்த வேதனை அளிக்கிறது. ஒவ்வொருவரின் மனசாட்சியையும் உலுக்குகிறது.இதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இது தொடர்பாக முதல்வர் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டு அந்த ஆணையம் விசாரணையை மேற்கொண்டு வருகிறது.
அதேசமயம் சட்டமன்றம் கூடும் சமயத்தில் முதல்வர் பல நல்ல திட்டங்களை இந்த கூட்டத் தொடரில் அறிமுகம் செய்யவிருக்கிற நேரத்தில் அவருக்கும் அரசுக்கும் தர்மச் சங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த சம்பவம் நடந்திருப்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
பல நாட்களாக அந்த பகுதியில் சாராயம் விற்கப்படுகிறது என்று சொன்னாலும் உயிரை குடிக்க கூடிய அளவிற்கு விஷத்தை கலக்க வேண்டிய அவசியம் என்ன? அது யாரால் என்ன நோக்கத்திற்காக ஏற்படுத்தப்பட்டது என்பதை விசாரிக்க வேண்டும். இதற்காக நியமிக்கப்பட்டுள்ள நீதி ஆணையம் அத்தனை கோணங்களிலும் தனது விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
தமிழகத்தில் பணியாற்றி வரும் ஐ.ஏ.எஸ்., ஐ பி எஸ் அதிகாரிகளில் சிலர் மத்திய அரசிடமும் பாஜகவுடனும் நெருக்கமாக இருக்கிறார்கள். இவர்களது நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட வேண்டும். இது பற்றியும் தீர விசாரணை நடத்தப்பட வேண்டும் அவ்வாறு அதிகாரிகளுக்கு தொடர்பு இருக்கும் பட்சத்தில் அது தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீட் தேர்வு விசயத்தில் அகில இந்திய அளவில் தற்போது குளறுபடிகள் நடந்து வருகிறது. இதில் தமிழகம் பல ஆண்டுகளாக வலியுறுத்திய கருத்துக்கள் உண்மையான பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. எனவே நீட் தேர்வு அடியோடு ரத்து செய்யப்பட வேண்டும்.
தென் மாநில முதல்வர்கள் இதற்கென ஒரு கூட்டமைப்பை உருவாக்கி நீட் தேர்வை ரத்து செய்வதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும்.பாஜக ஆளும் மாநிலங்களில் மட்டும் நீட் தேர்வு குறித்த வினாத்தாள்கள் எப்படி முன்கூட்டியே வெளியிடப்படுகிறது? பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகளுக்கு நெருக்கமான நிறுவனங்களுக்காகவே நீட் தேர்வு நடத்தப்படுகிறது.
பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு குஜராத் மாநிலமே முன்மாதிரியாக திகழ்கிறது. போதைப்பொருள் கடத்தலாகட்டும் , நீட் தேர்வு குளறுபடியாகட்டும், வங்கி மோசடிகள் என எல்லாமே குஜராத்தில் இருந்து தான் தொடங்குகிறது. இது தேச நலனுக்கு விரோதமானது.
இவ்வாறு பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.