அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை; எதிரியும் இல்லை- அண்ணாமலை
கூட்டணி கட்சியை வளர்க்க நினைப்பவர்கள் முட்டாள்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
டெல்லி செல்லும் முன் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “கூட்டணி கட்சியினர்களின் விமர்சனத்தை நல்லதாகவே பார்க்கிறேன். கூட்டணி கட்சிகளை வளர்க்க வேண்டும் என யாரும் நினைக்க மாட்டார்கள். அரசியலை பொறுத்த வரை யாரும் நண்பர்கள் இல்லை என்பதை புரிந்து கொண்டால் தான் பாஜகவுக்கு வளர்ச்சி. கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் என் மீது வைக்கும் விமர்சனங்களை வரவேற்கிறேன். பாஜக வளர்ச்சியை அவர்கள் ரசிக்கவில்லை. அவர்கள் கட்சி வளர்ச்சியை நாங்கள் தடுக்கிறோம் என நினைக்கிறார்கள். அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை, எதிரியும் இல்லை.
பெண்கள், குழந்தைகள் மீது வன்மத்தை கக்குபவர்களை கைது செய்வதை விட சமூக வலைதளங்களில் விமர்சிப்பவர்களை கைது செய்வதிலேயே திராவிட மாடல் ஆர்வம் காட்டுகிறது. சமூக வலைதளத்தில் சாதாரணமாக பதிவிடுபவர்களை கூட கைது செய்வது ஸ்டாலினின் பலவீனத்தை காட்டுகிறது. கர்நாடகாவில் ஒன்பதரை ஆண்டுகள் காவல்துறை பணியில் நான் ஒரு பைசா இலஞ்சம் வாங்கி இருக்கின்றனா? காவல்துறை பணியில் ஒரு ரூபாய் லஞ்சம் வாங்கினேன் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி நிரூபிக்கட்டும். ஆட்சியும் அரசும் உங்கள் கையில் இருக்கும் பொழுது ஒரு தனி மனிதனை எதிர்க்க பெரிய கூட்டம் அலைந்து கொண்டிருக்கிறது” எனக் கூறினார்.