அதிமுக மாநாட்டில் பிரம்மாண்டம் இல்லை- அண்ணாமலை
அதிமுக மாநாட்டில் பிரம்மாண்டம் என்றும் ஒன்றும் இல்லை, அரசியலில் அப்படி ஒரு வார்த்தை கிடையாது, பாஜகவின் என் மண் என் மக்கள் யாத்திரை பிரமாண்டத்தை பார்க்க தான் போகிறீர்கள் என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “நிலாவிற்கு செல்ல வேண்டுமென்ற பாரதியார் கனவு நேற்று நனவாக்கியுள்ளது. இதுவரை யாரும் செல்லாத தென்துருவத்திற்கு இந்தியா சென்று சாதனை படைத்துள்ளது. இது அனைவருக்கும் கிடைத்த பெருமை. கடந்த காலங்களில் உலக நாடுகள் இந்தியாவை கிண்டல் செய்த நிலையில், தற்போது தனித்துவமான நாடாக இந்தியா உருவாகியுள்ளது. சந்திராயனில் பணியாற்றியவர்கள் மட்டுமல்லாது ஏபிஜெ அப்துல் கலாம் கூட தமிழ் மொழியில் படித்தவர். இஸ்ரோவிற்கும், தமிழ்நாட்டிற்கும் மிகப்பெரிய பந்தம் உள்ளது.
அனைத்து மாநாடுகளும் வெற்றிபெற வேண்டும், ஊடகங்கள் குறைகளை எடுத்து காட்டுகிறார்கள், அனைத்து மாநாடுகளில் சில குறைகள் இருக்கும், மாநாடு நோக்கம் என்ன என்பதை பார்க்க வேண்டும். அதிமுக மாநாடு அவர்கள் கட்சி, அவர்கள் மாநாடு இதில் கருத்து சொல்ல ஒன்றும் இல்லை, அது பெரிய விஷயம் அல்ல. அனைவருக்கும் உணவு கொடுக்க வேண்டும் என்பதே நோக்கம், சில குறைகள் இருக்கலாம். ஆனால் மாநாட்டில் பிரமாண்டம் இல்லை, அரசியலில் பிரமாண்டம் என்று ஒன்றும் கிடையாது. அந்தந்த கட்சி அதன் வலுவை காட்டுகிறது. என் மண் என் மக்கள் யாத்திரை பிரம்மாண்டத்தை பார்க்க தான் போகிறீர்கள்” என்றார்.