”தலைமை தேர்தல் ஆணையாளர் நியமனத்தை நள்ளிரவு அறிவித்தது, பிரதமர் மோடிக்கும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் அவமரியாதைக்குரியது” என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக தாக்கியுள்ளார்.
“இந்த நியமனத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தேர்வு குழுவிலிருந்து நீக்கப்பட்டதற்கும் ராகுல் தனது ஆட்சேபனையை தெரிவித்தார். இந்த நடவடிக்கை தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை குறை மதிப்பிற்கு உட்படுத்துகிறது” என்றும் அவர் குறை கூறினார்.
குறிப்பாக இந்த விவகாரம் குறித்து அடுத்த 48 மணி நேரத்தில் உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், 1988 ஆம் ஆண்டு கேரளா கேடர் ஐஏஎஸ் அதிகாரியும், நாடாளுமன்ற விவகார முன்னாள் செயலாளருமான ஞானேஸ்குமாரை புதிய தலைமை தேர்தல் ஆணையராக மத்திய அரசு நேற்று நியமித்தது.
இந்த தேர்வு குழுவில் பிரதமர் மோடி, மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால், மத்திய உள் துறை அமைச்சர் அமித்ஷா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இந்தத் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் சமூக வலைதள பதிவில் கருத்து தெரிவித்திருக்கிறார்.
அதில், “அடுத்த தேர்தல் ஆணையர் தேர்ந்தெடுக்கும் குழுவின் கூட்டத்தில் நான் பிரதமருக்கும் உள்துறை அமைச்சருக்கும் ஒரு மறுப்பு குறிப்பை வழங்கினேன். நிர்வாக தலையீடு இல்லாத ஒரு சுயாதீன தேர்தல் ஆணையத்தின் மிக அடிப்படையான அம்சம் தேர்தல் ஆணையர் மற்றும் தலைமை தேர்தல் ஆணையரை தேர்ந்தெடுக்கும் செயல் முறையாகும்” என்று அதில் குறிப்பிட்டு இருக்கிறார்.
மேலும்” மோடி அரசு உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி தலைமை நீதிபதியையும் தேர்வு குழுவில் இருந்து நீக்கியதாகவும் “அதில் அவர் குற்றம் சாட்டியிருக்கிறார். “இது நமது தேர்தல் செயல்முறை நேர்மை குறித்த கோடிக்கணக்கான வாக்காளர்களின் கவலைகளை அதிகப்படுத்தி இருக்கிறது” என்றும் ராகுல் வேதனை தெரிவித்தார்.
மேலும் “எதிர்க்கட்சித் தலைவர் (எல் ஓ பி) என்ற முறையில், பாபா சாகேப் அம்பேத்கர் மற்றும் நமது நாட்டின் ஸ்தாபக தலைவர்களின் கொள்கைகளை நிறைவேற்றுவதும் அரசாங்கத்தை பொறுப்பேற்க வைப்பதும் எனது கடமையாகும்.
புதிய தலைமை தேர்தல் ஆணையரை தேர்ந்தெடுப்பதற்கு பிரதமரும் உள்துறை அமைச்சரும் நள்ளிரவில் முடிவு எடுத்தது அவமரியாதைக்குரியது மற்றும் மரியாதைக் குறைவானது. குழுவின் அமைப்பு மற்றும் செயல்முறை உச்ச நீதிமன்றத்தில் சவால் செய்யப்பட்டு , 48 மணி நேரத்திற்குள் விசாரிக்கப்பட உள்ளது” என்றும் ராகுல் காந்தி கூறியிருக்கிறார்.
காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் “தேர்வு குழுவின் அமைப்பு குறித்த உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு வரை இந்த கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்திருந்தது.
“இன்று தலைமை தேர்தல் ஆணையர் தேர்தல் தொடர்பான கூட்டம் நடைபெற்றது. உச்ச நீதிமன்றம் நாளை இந்த விவகாரத்தை விசாரித்து குழுவின் அமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி நம்புகிறது. இது போன்ற சூழ்நிலையில் இந்த கூட்டத்தினை ஒத்தி வைத்திருக்க வேண்டும்” என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மூத்த காங்கிரஸ் தலைவர் அபிஷேக் மனு சிங்வியும் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்தார். தலைமை நீதிபதியை விலக்குவதற்கான நடவடிக்கை தேர்தல் ஆணையத்தின் நம்பகத் தன்மையை உறுதி செய்வதற்கு பதிலாக அதை கட்டுப்படுத்தும் முயற்சியை குறிப்பதாக உள்ளது” என்று அவர் குற்றம் சாட்டியிருக்கிறார்.
“தலைமை நீதிபதியை ஒரு சுயாதீன அமைப்பாக நியமனம் செய்வதிலிருந்து நீக்குவது அல்லது விலக்கி வைக்க முயற்சிப்பது அரசாங்கம் கட்டுப்பாட்டை மட்டுமே விரும்புகிறது நம்பகத்தன்மையை அல்ல என்பதை தெளிவுபடுத்தி இருக்கிறது. தேர்தல் ஆணையத்திற்கு மிக முக்கியமான விஷயம் நம்பகத்தன்மை” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
முன்னதாக நாடாளுமன்றத்திலும் ராகுல் காந்தி இந்த பிரச்சினையை எழுப்பி இருந்தார். தலைமை நீதிபதியை தேர்வு குழுவிலிருந்து நீக்கும் முடிவு குறித்து பிரதமரிடம் அவர் கேள்வி கேட்டார்
விதிகள் மாற்றப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையர், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் தலைமை நீதிபதி ஆகியோர் தேர்வு செய்து வந்தனர். தலைமை நீதிபதி அந்த குழுவில் இருந்து நீக்கப்பட்டார். இதில் பிரதமருக்கு ஒரு கேள்வி. தலைமை நீதிபதி ஏன் குழுவில் இருந்து நீக்கப்பட்டார்?” என்று அவர் கேட்டிருந்தார்.
தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் (நியமனம், சேவை, நிபந்தனைகள் மற்றும் பதவிக்காலம்) சட்டம் 2023 பற்றியது. இது தலைமை நீதிபதியை தவிர்த்து தேர்தல் குழுவின் அமைப்பை மாற்றியது.
தற்போதைய தலைமை தேர்தல் ஆணையர் ராஜ்குமார் பிப்ரவரி 18ஆம் தேதி (அதாவது இன்று)ஓய்வு பெற உள்ளதால் இந்த நியமனம் முக்கியத்துவம் பெறுகிறது. அவர் வெளியேறியதைத் தொடர்ந்து ஞானேஷ்குமார் மூத்த தேர்தல் ஆணையராக மாறுவார். அவருடைய பதவி காலம் ஜனவரி 26- 2029 ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்படும்.