அரசு நிறுவனங்கள் தவறாக பயன்படுத்தப்படுகிறதா? ஜெய்ராம் ரமேஷ் கேள்வி
அரசு நிறுவனங்களை தவறாக பயன்படுத்தி அதானி குழுமம் பாதுகாப்புத்துறை நடவடிக்கைகளில் ஈடுபட முயற்சித்தார்களா என, காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், அதானி குழுமத்துக்கும், பிரதமர் மோடிக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து கேள்வி எழுப்பி வருகிறார். 23-வது நாளான நேற்று எழுப்பியுள்ள கேள்வியில், ஐநா தடைகளை மீறி வட கொரியாவுக்கு பெட்ரோலிய பொருட்களை கடத்துவது போன்ற நடவடிக்கையில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இவற்றில் அதானி குழுமத்துக்கு நெருக்கமான தொடர்புகள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது என்றும், இது தொடர்பான விசாரணை இத்தனை ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளதா என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.
மேலும் லஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளான நிறுவனத்தின் மீதான தடையை நீக்கியது ஏன் என்றும், அரசு நிறுவனங்களை தவறாக பயன்படுத்தி அதானி குழுமம் பாதுகாப்புத்துறை நடவடிக்கைகளில் ஈடுபட முயற்ச்சித்தார்களா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.