தமிழ் நிலப்பரப்பை நாசம் செய்ய ஆர்.எஸ்.எஸ்., பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்புகள் முயற்சி என தமிழ்நாடு காங்கிரஸ் கடசி தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பன்முகத்தன்மை கொண்டு மக்கள் அமைதியாக வாழும் தமிழ்நாட்டில், போலி மதவாதப் பேர்வழிகள், தங்களது குதர்க்க சிந்தனை மூலமாக தமிழ்நாட்டை நாசம் செய்ய முயற்சிக்கிறார்கள். திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக காலம் காலமாக மாமன் மச்சான் என்ற உறவின் முறை கொண்டு பழகி வரும் மக்களிடையே பழிகள், வதந்திகள், அவதூறுகள் மூலமாக தமிழ் நிலப்பரப்பை நாசம் செய்ய ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க, மற்றும் இந்து முன்னணி போன்ற அமைப்புகள் முயற்சி செய்ய நினைக்கின்றன.
உண்மையான கடவுள் நம்பிக்கையாளர்கள், ஆன்மிக உள்ளம் கொண்டவர்கள், இறையியலாளர்களால் பாராட்டப்பட வேண்டிய அனைத்துச் செயல்களையும் ஆளும் அரசு செய்து வருகிறது. ஆனால் பா.ஜ.க.வுக்கு அதிலெல்லாம் துளியும் நம்பிக்கை கிடையாது. இறையியல், கடவுள், ஆன்மிகம் என்பதைவிட அவதூறுகள், வதந்திகள், பொய்கள் ஆகியவற்றை மட்டுமே நம்பி கட்சி நடத்துபவர்களாக இருக்கிறார்கள்.
எந்த வகையிலாவது தமிழ்நாட்டில் காலூன்றி விடவேண்டும் என நினைக்கின்ற மதவெறி சக்திகள் இதுபோன்ற சூழல்களைப் பயன்படுத்திக் கொண்டு தங்களை வளர்த்துக் கொள்ள முடியுமா என்று எதிர்பார்க்கின்றன. வடநாட்டில் நிலவுவது போன்று, மக்களிடையே குழப்பத்தை உண்டாக்கி, கலகம் விளைவிக்கப் பார்க்கின்றன. அதன்மூலம் அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கின்றனர்.
வன்முறையோ குற்றச்செயலோ எந்தப் பக்கம் இருந்து வந்தாலும் அதனை யார் செய்தாலும் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்குவதில் அரசு தயக்கம் காட்டாமல் காவல்துறை கொண்டு அடக்க வேண்டும். வன்முறையைத் தூண்டிவிட சமூக விரோத மதவாத சக்திகள் முனையுமானால், அவர்கள் கடுமையாக ஒடுக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டு மக்கள் அவர்களை அடையாளம் கண்டு கொள்வார்கள். அமைதியைக் குலைக்கும் எவராக இருந்தாலும் மக்களால் அந்நியப்படுத்தப்படுவார்கள் என்பதை மதவாத சக்திகள் உணர வேண்டும். என்று இவ்வாறு அவர் கூறியுள்ளார்.