பாஜக கட்சியின் இரண்டாவது வேட்பாளர் பட்டியல் வெளியீடு.
கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலுக்கு பாஜக கட்சியின் இரண்டாவது வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. முதல் வேட்பாளர் பட்டியலில் 10 நடப்பு பாஜக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ள நிலையில் இரண்டாவது பட்டியலில் 7 நடப்பு பாஜக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு போட்டியிட வாய்ப்பு மறுப்பு.
கர்நாடக மாநிலத்தில் வரும் மே 10 ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு பாஜக கட்சி சார்பில் கடும் இழுப்பரிக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை (11.04.2023) இரவு 189 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
இதில் பத்து நடப்பு பாஜக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் பல மூத்த தலைவர்களுக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டு 52 புது முகங்களுக்கு போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இன்னலையில் பாஜக கட்சி சார்பில் புதன்கிழமை(12.04.2023) இரவு 23 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 3 நடப்பு பாஜக கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமே மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் நடப்பில் உள்ள 7 பாஜக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
கலகட்டி தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் நிம்பன்னாவர், ஹாவேரி தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் நேரு ஒலேகர், தாவண்கரே வடக்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத், மாயகொண்டா தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் லிங்கண்ணா, பைந்தூர் தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் சுகுமார் செட்டி, மூடிகரே தொகுதியில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் எம் பி குமாரசாமி மற்றும் சென்னகிரி தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் விருபாக்ஷப்பா லஞ்சம் பெற்ற வழக்கில் சிறையில் உள்ள நிலையில் அவருக்கும் என 7 நடப்பு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலுக்காக நாளை வேட்பு மனு தாக்கல் தொடங்க உள்ள நிலையில் பாஜக கட்சி சார்பில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ள பல மூத்த தலைவர்கள் காங்கிரஸ் அல்லது மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியும் இணைந்தோ அல்லது சுயேச்சையாகவோ போட்டியிட முடிவு செய்துள்ளனர்.
மேலும், இந்த காரணத்தினால் பாஜக கட்சிக்கு சட்டமன்றத் தேர்தல் களத்தில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பாஜக கட்சி சார்பில் 212 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர் வெளியிடப்பட்டுள்ள நிலையில் மேலும் 12 சட்டமன்ற தொகுதி வேட்பாளர்களுக்கான பட்டியல் பாஜக வெளியிடாமல் உள்ளது.
இதில் குறிப்பாக தேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள ஈஸ்வரப்பா, கட்சி தேர்தல் அரசியலில் இருந்து விலக வற்புறுத்தியதை எதிர்த்த ஜெகதீஷ் ஷட்டர் ஆகியோர் தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு தற்பொழுதும் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.