”மத்திய அரசு மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் தமிழகத்தின் மொழி சென்டிமெண்டை புரிந்து கொள்ளவில்லை. தாய்மொழி நம் உயிர் என்பது அவர்களுக்கு புரியவில்லை” என அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”தமிழகத்தின் மொழி சென்டிமெண்டை மத்திய அரசு புரிந்து கொள்ளவில்லை. தமிழர்களின் வரலாறு அவர்களுக்கு தெரியவில்லை. அதை நினைக்கும்போது பரிதாபமாக உள்ளது. தமிழ் மொழியை நாம் எந்த அளவுக்கு உயிராக பார்க்கிறோம் என்பது அவர்களுக்கு புரியவில்லை. அதனால்தான் அமித்ஷாவுக்கும், இயக்குனர் சந்தான பாரதிக்கும் வித்தியாசம் தெரியாமல் போஸ்டர் அடிக்கிறார்கள்.
பாஜகவை சேர்ந்தவர்களுக்கு இரு மொழிக் கொள்கை பற்றியும், மும்மொழிக் கொள்கை பற்றியும் என்ன தெரியும்? ஒன்றிய அரசு சொல்லும் வேலையை கண்மூடித்தனமாக செய்கிறார்கள். உயிர் பிரச்சினையாக இருப்பது மொழிப்போர். உரிமைப் பிரச்சினையாக இருப்பது (டீலிமிட்டேஷன்) தொகுதி மறு சீரமைப்பு.
பள்ளிகளின் வாசலில் நின்று பிஸ்கட் கொடுத்து மாணவர்களிடம் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து வாங்குபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
புதிய கல்விக் கொள்கையை உருவாக்கும் போது முறையான வல்லுநர்களின் கருத்தை கேட்டு அதனை வடிவமைக்க வில்லை. மத்திய அரசு 2000 கோடி ரூபாயை தருவதாக நிர்பந்திப்பது தவறு.கொள்கை மற்றும் மரியாதையை இழந்து நிதியை பெற வேண்டிய அவசியம் இல்லை.
நாடாளுமன்ற தொகுதி சீரமைப்பு விவகாரத்தில் அரசியல் பார்க்காமல் அனைத்து கட்சியினரும் ஒன்றாக செயல்பட்டு தீர்வு காணவேண்டும்.மத்திய அரசு மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக 1 கோடி கையெழுத்தை பெற தமிழகத்தின் பள்ளிகளின் வாசல்களில் நின்று கையெழுத்து வாங்குகின்றனர். வேண்டுமெனில் வீடு வீடாக சென்று கையெழுத்து வாங்குங்கள். ஆனால் பள்ளி வாசல்களில் நின்று கொண்டு பிஸ்கட் பாக்கெட்டுகளை கொடுத்து கையெழுத்து பெறுவது ஏன்? அவ்வாறு கையெழுத்து பெறும் நபர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என ஆவேசமாக எச்சரித்தார்.