கச்சத்தீவு விவகாரத்தில் வரலாறை தெரிந்து கொள்ளாமல் பேசும் பாஜக தலைவர் அண்ணாமலை, காங்கிரஸ் பற்றி புரிந்து கொண்டு பேச வேண்டுமென அக்கட்சியின் தமிழகத் தலைவர் செல்வப் பெருந்தகை அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கு. செல்வப்பெருந்தகை, கச்சதீவு விவகாரத்தில் 1974 மற்றும் 1976-ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் தொடர்பான குறும்படத்தை வெளியிட்டார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், கச்சத்தீவு இலங்கைக்கு கொடுக்கப்பட்ட விவகாரத்தில், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி மிகப்பெரிய ராஜதந்திரத்துடன் செயல்ப்பட்டார் என்பது வரலாற்று உண்மை என்றார். ஆனால், அந்த வரலாறை அறியாமல், வரலாற்றை படிக்காமல் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வாய்க்கு வந்ததை பேசி வருகிறார் என செல்வப் பெருந்தகை சாடினார்.
கச்சத்தீவுவில் மனிதர்கள் வாழ தகுதியற்ற 285 ஏக்கர் நிலம் மட்டுமே இலங்கைக்கு கொடுக்கப்பட்டதாகவும் அதே நேரம் அந்தமான் அருகிலான வளங்கள் நிறைந்த 4 ஆயிரம் சதுர மைல் கொண்ட ஒரு பகுதி இந்தியாவிற்கு கிடைத்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். இது ராஜதந்திரமா இல்லையா என வினவிய செல்வப் பெருந்தகை, இதனை ராஜதந்திரம் என்று அவரது கட்சியில் பிரதமராக இருந்த வாஜ்பாயே கூறி, இந்திரா காந்தியை தூர்கா தேவி என்று பாராட்டினார் என கூறினார்.
தற்போது, மத்திய அமைச்சர் ஜெய்சங்கரும் இந்த நிகழ்வுகளை ஏற்றுக்கொண்டு, அது முடிந்து போன விஷயம் என்று குறிப்பிட்டுள்ளதை செல்வப் பெருந்தகை சுட்டிக்காட்டினார். அப்படி இருந்தும் அண்ணாமலை தொடர்ந்து, விமர்சித்து வருவது கண்டனத்திற்குரியது என்றும் காங்கிரஸ் பற்றி புரிதலோடு பேசவேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, பேசினால், இன்னும் பல ஆதாரங்களை வெளியிடுவோம் எனக் கூறிய செல்வப் பெருந்தகை, இந்தியாவின் வடபகுதியில் சீனா பல லட்சம் சதுர கிலோ மீட்டரை ஆக்கிரமித்து, பல கிராமங்களுக்கு பெயர்கள் வைக்கப்பட்டுள்ளது தொடர்பாக பா.ஜ.க வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் என வலியுறுத்தினார். தொடர்ந்து, கச்சத்தீவுவை மீட்போம் என்று உங்கள் கூட்டணி கட்சி தி.மு.க.வும் சொல்கிறதே என்று செய்தியாளர்கள் தரப்பில் கேட்டபோது,
நாங்கள் வரலாற்றை வெளியிட்டுள்ளோம் என்றும் வரும் காலங்களில் தி.மு.க.தேர்தல் அறிக்கையில் கச்சதீவை மீட்போம் என்ற வாக்குறுதி வேண்டாம் என்று எடுத்து கூறுவோம் என்றும் செல்வப் பெருந்தகை பதிலளித்தார்.
செய்தியாளர்கள் உடனான சந்திப்பை தொடர்ந்து, தமிழக காங்கிரஸ் ஓ.பி.சி.சார்பில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75-வது ஆண்டு விழாவையொட்டிய அரசமைப்புச் சட்ட பாதுகாப்பு கூட்டம், ஓ.பி.சி. தலைவர் டி.ஏ. நவீன் முன்னிலையில் நடைபெற்றது. இதில் செல்வப் பெருந்தகை உடன் அகில இந்திய காங்கிரஸ் பிற்ப்படுத்தப்பட்டோர் துறை தலைவர் அஜய்சிங் யாதவ், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் எஸ். ராஜேஷ்குமார், துணைத் தலைவர்கள் கோபண்ணா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
எல்லா காலங்களிலும் அதிமேதாவிகள் இருக்கத்தான் செய்கின்றனர் – அமைச்சர் துரைமுருகன்