நிதிஷ், சந்திரபாபுவை தக்கவைக்க விலை கொடுக்கும் பாஜக
நாடாளுமன்றத்தில் தனி பெரும்பான்மை இல்லாததால் நிதிஷ்குமார் மற்றும் சந்திரபாபு நாயுடுவை கூட்டணியில் தக்க வைத்துக்கொள்ள பெறும் விலை கொடுக்க வேண்டிய கட்டாயம் பாஜகவுக்கு ஏற்பட்டுள்ளது. நிதிஷ்குமாரும் சந்திரபாபுவும் முக்கிய அமைச்சர் பதவிகள் மீது கண் வைத்துள்ள நிலையில் அவற்றை விட்டுக் கொடுக்க பாஜக தயாராக இல்லை.
நாடாளுமன்ற மக்களவையில் தனிப்பெரும்பான்மை பெற 272 இடங்கள் தேவை என்ற நிலையில் பாஜகவுக்கு 240 தொகுதிகள் மட்டுமே வசமாகின. பெரும்பான்மைக்கு மேலும் 32 இடங்கள் தேவை என்ற நிலையில் கூட்டணியில் உள்ள நிதிஷ்குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு கட்சிகளின் ஆதரவுடன் தான் ஆட்சி அமைக்க முடியும் என்ற கட்டாயம் பாஜகவுக்கு ஏற்பட்டுள்ளது.
தெலுங்கு தேசம் மற்றும் ஜே.டி.யு இணைந்து 28 இடங்களை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு கட்சிகளின் துணையின்றி அரசமைக்க வாய்ப்பு இல்லை என்பதால் அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் கட்டாயத்தில் பாஜக இருக்கிறது.
நிதீஷ் குமாரை பொறுத்தவரை முக்கிய கேபினட் அமைச்சர் பதவிகளை குறி வைத்துள்ளார். குறிப்பாக கிராமப்புற வளர்ச்சி, பாதுகாப்பு, ரயில்வே மற்றும் வேளாண் அமைச்சர் பதவிகளை அவர் கோருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒன்றிய அரசின் நிதிகள் வாய்ப்புகளை அதிக அளவில் பெரும் நோக்கில் பீகார் மாநிலத்துக்கு சிறப்பு தகுதி கோரிக்கையை நிதிஷ்குமார் முன் வைத்திருப்பதாகவும் தெரிகிறது.
இத்துடன் மாநிலங்களவை துணைத்தலைவர் பதவி வேண்டும் என்று நிதிஷ்குமார் வலியுறுத்துவதாகவும் கூறப்படுகிறது. இது தவிர நாடு முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பை நடத்தவும் பாஜக அரசினை நித்திஷ் குமார் வலியுறுத்துவார் என்று அரசியல் நோக்கங்கள் கூறுகிறார்கள்.
சந்திரபாபு நாயுடு இதுவரை வெளிப்படையாக பேசவில்லை என்றாலும் முக்கிய அமைச்சர் பதவிகள் மீது கண் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. நகர் மற்றும் கிராமப்புற வளர்ச்சி, கப்பல் மற்றும் துறைமுகங்கள், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை, ஜல்சக்தி எனப்படும் நீர்வளத்துறை ஆகியவற்றை சந்திரபாபு கோரலாம் என்று தெரிகிறது.
அத்துடன் ஆந்திராவுக்கு சிறப்பு தகுதி என்ற கோரிக்கையை நிறைவேற்ற அவர் அழுத்தம் கொடுப்பார் என்று தெரிகிறது. ஆந்திராவுக்கு சிறப்பு தகுதி கோரியது தொடர்பான சர்ச்சை தான் 2016 இல் பாஜக கூட்டணியில் இருந்து பிரிந்த செல்ல சந்திரபாபு நாயுடுவை தூண்டியது குறிப்பிடத்தக்கது.
மேலும் வாஜ்பாய் அரசில் மக்களவை சபாநாயகராக தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த ஜி.எம்.சி.பாலயோகி பணியாற்றியதை சுட்டிக்காட்டும் சந்திரபாபு நாயுடு மீண்டும் அந்த பதவியை பெற அழுத்தம் தருவதாகவும் கூறப்படுகிறது.
நிதீஷ் மற்றும் சந்திரபாபுவின் எதிர்பார்ப்புகள் ஒரு பக்கம் இருந்தாலும் சில முக்கிய இலாக்காக்களை விட்டுக்கொடுக்க பாஜக தயாராக இல்லை. குறிப்பாக ரயில்வே, உள்துறை, நிதி, பாதுகாப்பு, சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறைகளை தன் வசம் வைத்திருக்கவே பாஜக விரும்புகிறது. இதனால் நிதிஷ், நாயுடு கட்சிகளுக்கான இலாகா பேச்சுக்களின் போது பூதாகர பிரச்சனைகள் வெடிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.
தற்போதைய நிலையில் ஜே.டி.யு, டிடிபி கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்வதாகவே அறிவித்துள்ளன. இருப்பினும் நிதிஷ்குமாரும் சந்திரபாபு நாயுடுவும் பேச்சு வார்த்தைகளுக்கு பெயர் பெற்றவர்கள் என்பதால் அவர்களது கோரிக்கைகள் நிராகரிக்கப்படும் நிலையில் ஆதரவு கட்சிகள் மாறலாம் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.