ஒட்டு மொத்த இந்தியாவில் மிகப் பெரிய ஏமாற்றத்தை பாஜக சந்திக்கும்: கி.வீரமணி
தேர்தல் ஆதாயத்திற்காக தரமற்று பேசும் பாஜக மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் போக்கை, வட இந்தியாவில் வாழ்பவர்களும் வெறுக்க துவங்கி விட்டதாக, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
சென்னை காமராஜர் சாலையில் உள்ள மாநில கல்லூரியில் அக்கல்லூரியின் அகத்தர மதிப்பீட்டுக் குழு மற்றும் மாநில கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி ராதா கிருஷ்ணன் ஆகியோரின் பிறந்த நாளையொட்டி முப்பெரும் விழா நடைபெற்றது.
இதில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, திமுக செய்தி தொடர்பு குழுத் தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய கி.வீரமணி, மாணவர்களுக்கு படிப்பறிவு மட்டுமே போதாது பகுத்தறிவும் வேண்டும் என்றார். பெண்கள் செவ்வாய் கிரகத்திற்கு போனாலும் கோவில் கருவறைக்குள் போக முடியாதிருந்த நிலையை தற்போதைய திமுக ஆட்சி அனைத்து பெண்களும் அர்ச்சகர் ஆகலாம் எனும் அளவிற்கு மாற்றியுள்ளது என பெருமிதம் தெரிவித்தார்.
பள்ளிகள் சிற்றுண்டி வழங்கும் நிலையை கடந்து, கல்லூரிகளில் உணவளிக்கும் நிலையும் திராவிட மாடல் ஆட்சியில் ஏற்படும் என வீரமணி நம்பிக்கை தெரிவித்தார்.
தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய டி.கே.எஸ். இளங்கோவன், பெண்ணுக்கு முழு சுதந்திரம் கொடுக்கும் நாடு, தமிழ்நாடு என்றார். மற்றவர்களை மதிக்க வேண்டும் என்றும் சாதிய வேறுபாடுகளை கலைந்த தலைவர்களின் எழுத்தையும், பேச்சையும் கடைப்பிடிப்போம் என்றும் அவர் பேசினார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கி.வீரமணி, அண்ணாமலை பயணமும் பேச்சும் மக்கள் மத்தியில் எடுபடவில்லை என கூறினார். எதையாவது சொல்லி அதற்கு யாராவது பதில் சொல்ல மாட்டார்களா என்று ஏங்கிக் கொண்டிருக்கிறார் என்றும் அவர் ஏக்கத்திற்கு தாம் தீனி தர விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.
மோடி ஆட்சியின் ஊழலை மறைப்பதற்காகவே பாஜகவினர், விஷ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட அமைப்பினர் ஆதிதிராவிடர்கள் மற்றும் அம்பேத்கரை பற்றி இழிவாக பேசி வருவகின்றனர் என வீரமணி குறிப்பிட்டார்.
தேர்தல் ஆதாயத்திற்கான அவர்களது பேச்சு வட இந்தியாவில் எடுபடும் என நினைத்தாலும் ஒட்டு மொத்த இந்தியாவில் மிகப் பெரிய ஏமாற்றத்தை பாஜக சந்திக்கும் என்று அவர் கூறினார்.
பாஜகவினரின் ஆசை இந்த முறை நிராசையாகும் என்றும் பாஜகவினர் பற்றி வடக்கேயும் மக்கள் புரிந்து கொண்டு வருவதாகவும் வீரமணி தெரிவித்தார். மேலும், மாணவர்களுடன் சேர்ந்து சமூக நீதி நாள் உறுதி மொழியை கி.வீரமணி மற்றும் டி.கே.எஸ் இளங்கோவன் எடுத்துக் கொண்டனர்.