மக்களவைத் தேர்தலில், 200 இடங்களை கூடு பாஜக தாண்டாது என்று தகவல்கள் வெளி வருவதால், திமுக தலைவர் ஸ்டாலின் கைகாட்டும் நபர்தான் அடுத்த பிரதமர் என்ற நிலை ஏற்படும் என மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் கூறியுள்ளார்.
மக்களவைத் தேர்தல் வெற்றியை திமுக தலைவர் ஸ்டாலினிடம் கலைஞர் நூற்றாண்டுக்கான வெற்றியாக அர்ப்பணிப்போம் என்றும் அவர் சூளுரைத்துள்ளார்.
நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் 4- ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி இன்றைய தினம் தமிழ்நாடு முழுவதும் காணொலி வாயிலாக திமுக மாவட்டச் செயலாளர்கள், வேட்பாளர்கள், தலைமை முகவர்கள், வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.
அதன் ஒரு பகுதியாக, மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட திமுக மாவட்டச் செயலாளர்கள், வேட்பாளர்கள், தலைமை முகவர்கள், வாக்கு எண்ணிக்கை முகவர்களின் ஆலோசனைக் கூட்டமானது சென்னை, அண்ணாநகரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
இதில், மத்திய சென்னை தொகுதி வேட்பாளர் தயாநிதி மாறன், மாவட்ட செயலாளர் சிற்றரசு, அண்ணாநகர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் எம்.கே.மோகன், திமுக நிர்வாகிகள் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ வாக்கு எண்ணிக்கையின்போது கடைபிடிக்க வேண்டியவை குறித்து ஆலோசனைகள் வழங்கினர்.
குறிப்பாக, வாக்கு எண்ணிக்கையின் போது முகவர்கள் எடுத்துச் செல்ல வேண்டியவை, வாக்கு எண்ணிக்கைக்கு செல்லும் முகவர்கள் இறுதியாக வெற்றிக்கான சான்றிதழ் வழங்கும் வரை வாக்கு எண்ணிக்கை மையத்தைவிட்டு வெளியேறக் கூடாது என்றும் தபால் வாக்குகள் எண்ணிக்கையில் விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்வதோடு முகவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.மேலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்டவை குறித்தும் ஆலோசனைக் வழங்கப்பட்டன.
இந்தக் கூட்டத்தில் பேசிய மத்திய சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதி மாறன்,
இந்த தேர்தலில் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும் போதே தொடங்கி விடும் பிரச்சினைகளில் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றார்.
நாட்டிலேயே மத்திய சென்னைதான் குறைந்தளவு வாக்குபதிவில் முதலிடமாக உள்ளது எனக் கூறிய அவர், மத்திய சென்னையில் கண்டிப்பாக திமுகவுக்குத்தான் வெற்றி வாய்ப்பு உள்ளது என்றார். இந்த தேர்தலில் வெற்றிப் பெற்று அந்த வெற்றியை திமுக தலைவர் ஸ்டாலினிடம் கலைஞர் நூற்றாண்டுக்கான வெற்றியாக அர்ப்பணிப்போம் என்று தயாநிதி தெரிவித்தார். 200 இடங்களை பாஜக தாண்டாது என்று தகவல்கள் வருவதால், திமுக தலைவர் ஸ்டாலின் கைகாட்டும் நபர்தான் அடுத்த பிரதமர் என்கிற நிலை கண்டிப்பாக ஏற்படும் என தயாநிதி மாறன் கூறினார்.