உச்ச நீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி 10 பல்கலைக்கழக மசோதாக்களுக்கு ஆளுநரின் ஒப்புதல் பெற்றதாக கருதப்படுவதாக அறிவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு எழுத்து மூலமாக வாதத்தை தாக்கல் செய்துள்ளது.
ஆளுநருக்கு எதிரான வழக்கில் கடந்த பத்தாம் தேதி வாதங்கள் முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. அப்போது உச்ச நீதிமன்றம் எழுப்பிய 12 கேள்விகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பாக மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் சிங்வி, ராகேஷ் திவேதி, வில்சன் ஆகியோர் எழுத்து மூலமாக வாதங்களை தாக்கல் செய்துள்ளனர். அதில் ஆளுநர் தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையில் செயல்பட முடியாது.
அரசியல் சாசன பிரிவு 200- ன் படி மட்டுமே செயல்பட முடியும் என்று விரிவான அரசியல் சாசன அதிகாரங்களை தமிழ்நாடு அரசு விளக்கிக் கூறியுள்ளது. எனவே, ஆளுநர் அரசியல் சாசனப்படி செயல்படாதது, காலதாமதம் செய்தது போன்ற காரணங்களை கருத்தில் கொண்டு இரண்டாவது முறை சட்டப்பேரவை நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களை 28.11.2023 அன்று குடியரசு தலைவருக்கு அனுப்பிய உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆளுநர் அரசியல் சாசன பிரிவு 200-ன் படி செயல்படாத காரணத்தால் குடியரசு தலைவருக்கு அனுப்பியது உள்பட 10 பல்கலைகழக மசோதக்களுக்களுக்கு ஆளுநரின் ஒப்புதலை பெற்றதாக கருதுவதாக உச்சநீதிமன்றம் அறிவிக்க வேண்டும். அரசியல் சாசன பிரிவு 142-ன் படி உச்சநீதிமன்றத்துக்கு உள்ள தனி அதிகாரத்தை பயன்படுத்தி இந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள எழுத்துப்பூர்வமான வாதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.