ஆளுநர் பதவி நீக்கப்படும் வரை, அரசியல் மயமாகும் ஆளுநர் பதவியின் கண்ணியத்தைக் காத்திட ஆளுநர்களுக்கு நடத்தை விதிகள் உருவாக்கிடவும், மாநில அரசின் கோப்புக்கள், மசோதாக்களில் ஆளுநர் கையெழுத்திடுவதற்கு கால நிர்ணயம் செய்திடவும் வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் தி.மு.க வலியுறுத்த வேண்டும் உள்ளிட்ட 6 தீர்மானங்கள் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க எம்.பி.க்கள் (மக்களவை, மாநிலங்களவை) கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் உள்ள முரசொலி மாறன் வளாக அரங்கில் நடைபெற்றது.
கூட்டத்தில் பிப் 1- ஆம் தேதி ஒன்றிய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இந்த கூட்டத்தொடரில் தி.மு.க எம்.பி.க்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் ஒன்றிய அரசுக்கு எப்படி அழுத்தம் தர வேண்டும் என்பது குறித்து இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனைகள் மற்றும் அறிவுறுத்தல்களை வழங்கினார்.
கூட்டத்தில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுநர் ஓர் அங்கம். ஆனால் அந்த அவையின் மரபை மதிக்கமாட்டார். சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களை கிடப்பில் போடுவார். மாநில அரசின் “Constitutional Head” ஆளுநர். ஆனால் மாநில அரசின் ஆளுநர் உரையை படிக்கமாட்டார். தமிழ்த்தாய் வாழ்த்தை சிறுமைப்படுத்துவார். சமஸ்கிருதம்- இந்தி மொழி புகழ் பாடுவார்.
ஆளுநர் மாளிகையின் ஒட்டுமொத்த செலவும் மாநில அரசின்- அதாவது மாநிலத்து மக்களின் வரிப்பணம். ஆட்சியில் இருக்கும் கட்சிக்கு வழிகாட்ட வேண்டியவர் – ஆளுநர் மாளிகையில் அமர்ந்து எதிர்கட்சித் தலைவர் போல் அரசியல் செய்வார். பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனத்தில் மாநில அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து “துணைவேந்தர்கள் இல்லாத பல்கலைக்கழகத்தை” உருவாக்குவார். ஆனால் அதே பல்கலைக்கழகங்களில் பா.ஜ.க. அரசியல் பிரசங்கம் செய்வார். அக்கப்போர் அரசியல் மட்டுமே ஆளுநரின் அஜெண்டாவாக இருக்கிறது.
“ஆளுநரை நியமிப்பதற்குப் பதில் ஏன் தேர்ந்தெடுக்க கூடாது” என அரசியல் நிர்ணய சபையில் விவாதித்த போது “அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளுநர் அரசின் நிர்வாகத்தில் குறுக்கிடுவார். அப்படி அரசின் நிர்வாகத்தில் ஆளுநர் தலையிடுவது ஜனநாயகத்தை அடிமைப்படுத்துவது போலாகிவிடும் (amount to surrender of democracy)” என சட்ட அறிஞர்கள் குறிப்பிட்டனர். நியமிக்கப்பட்ட ஆளுநராக இருக்கும் தமிழ்நாடு ஆளுநர் மாண்புமிகு ஆர்.என். ரவி இன்று அதைத்தான் அடாவடியாகச் செய்து கொண்டிருக்கிறார்.
தமிழ்நாட்டின் வளர்ச்சியிலோ, தமிழ்நாட்டு மக்களின் நலனிலோ, தமிழ்நாட்டின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்திலோ – அவரே பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட அரசியல் சட்டத்திலோ நம்பிக்கை துளிகூட இல்லை. அவருக்கு இருக்கும் ஒரே ஆர்வம் வெகுஜன விரோத வலதுசாரி அரசியல் மட்டும் தான். அதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை.
“அரசின் கொள்கை முடிவுகளை நிறைவேற்ற முழுமையாக ஒத்துழைப்பு கொடுத்து துணை நிற்க வேண்டிய அரசியலுக்கு அப்பாற்பட்டவரை ஆளுநராக நியமிக்க வேண்டும்” என அரசியல் நிரணய சபை எதிர்பார்த்தது. ஆனால் ஆளுநர் ரவி நியமனத்தில் அது தவிடுபொடியாகிப் போனது என்பதை இந்த எம்.பி.க்கள் கூட்டம் மிகவும் வேதனையுடன் பதிவு செய்ய விரும்புகிறது.
சமீபத்தில் உச்சநீதிமன்ற நீதிபதி மாண்புமிகு நாகரத்னா அவர்கள், “இந்தியாவில் உள்ள ஆளுநர்கள் எங்கு செயல்படக் கூடாதோ அங்கு செயல்படுகிறார்கள். எங்கு செயல்பட வேண்டுமோ அங்கு செயல்படாமல் இருக்கிறார்கள்” எனக்குறிப்பிட்டு, “ஆளுநர்கள் பற்றிய வழக்குகள் நீதிமன்றங்களுக்கு வருவது சோக கதை” என்றார்.
இந்த கருத்திற்கு முற்றிலும் பொருத்தமான ஒரு ஆளுநராக தமிழ்நாடு ஆளுநர் ரவி இருப்பது உள்ளபடியே தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் விதமாக அமைந்துள்ளது. அவர் தமிழ்நாட்டின் வளர்ச்சியைக் கெடுக்கவே ஆளுநராக அமர்ந்து இருக்கிறார். குடியரசு தினத்தில் கூட அரசியல் செய்வதை அவர் விட்டு வைக்கவில்லை. எந்த எதிர்கட்சியும் கூட குடியரசு தின வாழ்த்தில் அரசை குறை கூறுவதில்லை. ஆனால் “By Order of Governor” என ஒவ்வொரு ஆணையும் வெளிவரும் தன் அரசையே குடியரசு தின வாழ்த்தில் குறை சொல்லி நாட்டின் பெருமையை – தமிழ்நாட்டின் சிறப்பை சிறுமைப்படுத்தியதற்கு இக்கூட்டம் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
ஆளுநர் பதவி நீக்கப்படும் வரை அரசியல் மயமாகும் ஆளுநர் பதவியின் கண்ணியத்தைக் காத்திட ஆளுநர் ஒருவர் எப்படிச் செயல்பட வேண்டும் என்ற நன்னடத்தை விதிகளை உருவாக்கிட வேண்டும் என்றும், மாநில அரசின் கோப்புகள், சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்படும் மசோதாக்கள் ஆகியவற்றில் கையெழுத்திட ஆளுநருக்கு காலநிர்ணயம் செய்ய வேண்டும் என ஏற்கனவே தமிழ்நாடு அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு நிலுவையில் உள்ள அந்த கோரிக்கையையும் நடைபெற இருக்கும் பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரில் வலியுறுத்திட இந்த எம்.பி.க்கள் கூட்டம் தீர்மானிக்கிறது.
மக்களின் துணையுடன் அரசு ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் ஒன்றிய பா.ஜ.க. அரசை பணிய வைத்து, டங்ஸ்டன் கனிமச் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு துணை நின்ற மக்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். “உருக்கு இரும்பு 5370 ஆண்டுகளுக்கு முன்னாலேயே தமிழ் நிலத்தில் அறிமுகமாகியுள்ளது” என உலகுக்கு அறிவித்த திராவிட மாடல் அரசின் சாதனையை ஒன்றிய அரசும், பிரதமரும் முன்னெடுக்க வேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
கூட்டாட்சி தத்துவம், மாநில கல்வி உரிமை, உயர் கல்வி அனைத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் பல்கலைக்கழக நிதி நல்கை குழுவின் வரைவு நெறிமுறைகளை திரும்ப பெறக் கோரி தி.மு.க தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளதற்கு ஏற்ப தி.மு.க மாணவரணியின் சார்பில் 06.02.2025 அன்று போராட்டம் நடத்தப்படும் என்றும், தி.மு.க. எம்.பி.க்கள் டெல்லியில் போராட்டம் நடத்துவார்கள் என்றும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
சிறுபான்மையினரின் நலனைப் பாதிக்கும் வக்பு சட்ட திருத்த மசோதா 2024-யை கொண்டு வந்து, நாடாளுமன்றக் கூட்டுக் குழுவிலும் முறைப்படி விவாதம் நடத்தாமல், எதிர்கட்சி உறுப்பினர்களை எல்லாம் வெளியேற்றி ஆரோக்கியமான விவாதமே பாராளுமன்ற ஜனநாயகத்தின் அடிநாதம் என்பதை மறந்து எதிர்கட்சிகள் அளித்த 44 திருத்தங்களையும் ஏற்காமல் அவசர அவசரமாக டெல்லித் தேர்தலை மனதில் வைத்து ஒன்றிய பா.ஜ.க. அரசு நிறைவேற்ற துடிப்பதற்கு இந்த எம்.பி.க்கள் கூட்டம் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
இச்சட்டத் திருத்தம் மீண்டும் அவையில் கொண்டு வரப்படும்போது திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தீவிரமாக எதிர்த்து வாக்களித்திட இக்கூட்டம் தீர்மானிக்கிறது. ஒன்றிய பா.ஜ.க. அரசின் நிதி நிலை அறிக்கைகளில் இதுவரை தமிழ்நாட்டிற்கு முத்திரைத் திட்டங்கள் எதையும் அறிவிக்கவில்லை. ரயில்வே திட்டங்களில் தமிழ்நாடு அடியோடு புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. நிதி ஒதுக்கீட்டிலும் தமிழ்நாடு வஞ்சிக்கப்படுகிறது. நம் மாநிலம் நேரடி வரியாக ஒன்றிய அரசுக்கு 100 ரூபாய் கொடுத்தால், நம் மாநிலத்திற்கு 29 ரூபாய் மட்டுமே திருப்பித் தரப்படுகிறது. ஆனால் 100 ரூபாய் கொடுக்கும் பா.ஜ.க. ஆளும் அஸ்ஸாம் மாநிலத்திற்கு 354 ரூபாயும், உத்தரபிரதேச மாநிலத்திற்கு 333 ரூபாயும், மத்திய பிரதேசத்திற்கு 279 ரூபாயும், ஒன்றிய ஆட்சியை தக்க வைக்க உதவும் கூட்டணிக் கட்சி ஆளும் பீஹார் மாநிலத்திற்கு 922 ரூபாயும் திருப்பி கொடுக்கிறார்கள் என்றால் தமிழ்நாடும், தமிழ்நாடு மக்களும் நிதி ஒதுக்கீட்டில் எவ்வளவு மோசமாக வஞ்சிக்கப்படுகிறார்கள் என்பது வெட்ட வெளிச்சமாகிறது.
இதே நிலைதான் வருவாய் பகிர்வு மற்றும் மானியப் பகிர்வு அனைத்திலும் நீடிக்கிறது. தமிழ்நாடு அனைத்து வகை நிதி ஆதாரத்திலும் ஒன்றிய அரசால் புறக்கணிக்கப்படுகிறது என்பதை இக்கூட்டம் வேதனையுடன் பதிவு செய்கிறது.கடந்த நிதி நிலை அறிக்கையை தமிழ்நாடு என்ற பெயரே இல்லாமல் தாக்கல் செய்த ஒன்றிய பா.ஜ.க. அரசு இந்த முறை நிதி நிலை அறிக்கையில் தமிழ்நாட்டிற்கு நிலுவையில் உள்ள மெட்ரோ ரயில் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு நிதி, பேரிடர் நிதி உள்ளிட்டவற்றை ஒதுக்கீடு செய்யதிடவும், தமிழ்நாட்டிற்கு என்று முத்திரைத் திட்டங்கள் மற்றும் புதிய ரயில்வே திட்டங்களை அறிவித்திடவும் ஒன்றிய அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது உள்ளிட்ட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, தி.மு.க எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, ஜெகத்ரட்சகன், தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன், பி.வில்சன், கிரிராஜன், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
2026-ல் திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் – முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை