மகாராஷ்டிராவின் ஃபட்னாவிஸ் முதல்வரானால் துணை முதல்வராக பதவி ஏற்பாரா? இல்லையா? என்கிற கேள்விதான் மகாராஷ்டிர அரசில் மையம் கொண்டுள்ளது. ஆசாத் மைதானத்தில் நடக்கும் விழாவில், ஷிண்டே துணை முதல்வராக பதவியேற்பார் என, முதலில் தகவல் வெளியானது.
ஷிண்டே துணை முதல்வராக வேண்டும் என சிவசேனா தலைவர்கள் விரும்புகின்றனர். உதய் சமந்த், சஞ்சய் ஷிர்சாத், சஞ்சய் கெய்க்வாட், பாரத் கோகவலே, தீபக் கேசர்கர் ஆகியோர் ஷிண்டேவை சமாதானப்படுத்தி துணை முதல்வராக பொறுப்பேற்க வலியுறுத்தி ஷிண்டேவின் இல்லத்திற்கு சென்று சந்தித்தனர்.
ஷிண்டே துணை முதல்வராக பதவியேற்க வேண்டும் என்று அக்கட்சியின் உதய் சமந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். எங்கள் 59 எம்.எல்.ஏ.க்களில் யாருக்கும் துணை முதல்வராக விருப்பம் இல்லை. துணை முதல்வர் பதவியை ஷிண்டே ஏற்காவிட்டால், அமைச்சர் பதவியை ஏற்க மாட்டோம். அதே நேரத்தில் ஷிண்டேவின் துணை முதல்வர் பதவி குறித்து ஒரு மணி நேரத்தில் முடிவு எடுக்கப்படும்’’ என அவர் தெரிவித்துள்ளார்.
பதவியேற்பு விழாவுக்கான அழைப்பிதழை பாஜக, சிவசேனா ஷிண்டே அணி மற்றும் தேசியவாத அஜித் பவார் அணியினர் தயாரித்துள்ளனர். இந்த மூன்று அழைப்பிதழ்களிலும் தேவேந்திர ஃபட்னாவிஸின் பெயர் முதலமைச்சராக குறிப்பிடப்பட்டுள்ளது. துணை முதல்வர் பதவிக்கான ஷிண்டே தரப்பினரின் அழைப்பிதழில் ஏக்நாத் ஷிண்டே பெயர் எழுதப்படவில்லை. இங்குதான் சஸ்பென்ஸ் அதிகரித்துள்ளது. துணை முதல்வராக அஜித் பவார் பதவியேற்பார் என என்சிபியின் துண்டு பிரசுரத்தில் கூறப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, தேவேந்திர ஃபட்னாவிஸ் மாலை ஏழு மணிக்கு ஏக்நாத் ஷிண்டேவின் இல்லத்துக்கு சென்றார். இந்த சந்திப்பு சுமார் நாற்பது நிமிடங்கள் நீடித்தது. இந்தக் கூட்டத்தில் அவரது கட்சிக்கு உள்துறை அமைச்சர் பதவி கொடுக்க முடியாது எனக் கூறப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவின் முதல்வராக மூன்றாவது முறையாக தேவேந்திர ஃபட்னாவிஸ் பதவியேற்கிறார். ஆசாத் மைதானத்தில் பதவியேற்பார். இந்த விழாவில் பிரதமர் மோடியும் கலந்து கொள்கிறார். மகாராஷ்டிராவில் நவம்பர் 20-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடந்து அதன் முடிவுகள் நவம்பர் 23-ம் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, சுமார் 2 வாரங்கள் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடந்து, இன்று ஃபட்னாவிஸ் தலைமையில் ஆட்சி அமைக்கப் போகிறது.
288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலில் 132 இடங்களை வென்று பாஜக வலுவானதாக உருவானதை அடுத்து ஃபட்னாவிஸ் இந்தப் பதவிக்கு வலுவான போட்டியாளராக உருவெடுத்தார்.