பாஜகவுக்கும் நோட்டாவுக்கும்தான் போட்டி- ஜோதிமணி எம்பி
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசுவதை சீரியஸாக எடுத்துக் கொள்ளக் கூடாது என கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியை பத்து தலை ராவணன் என்று விமர்சனம் செய்து அவதூறு பரப்பிய பாஜகவையும் பிரதமர் மோடியையும் கண்டித்து நேற்று நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சின்ன ரயில்வே கேட் செல்லும் சாலையில் உள்ள பாஜக அலுவலகம் அருகே காங்கிரஸ் கட்சியினர் கரூர் எம்பி ஜோதிமணி தலைமையில் பாஜகவையும் பிரதமர் மோடியையும் கண்டித்து முழக்கங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எம்.பி. ஜோதிமணி, “தமிழ்நாடு மக்களையும் தமிழ்நாடு ஊடகத்தினரையும் பொழுதுபோக்கு செய்வதற்காகவே அண்ணாமலை இருக்கிறார், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசுவதை சீரியஸாக எடுத்துக் கொள்ளக் கூடாது. பாஜக இந்த தேர்தலில் யாருடனாவது போட்டி போடுகிறார்கள் என்றால் அவர்கள் நிச்சயம் நோட்டாவோடுதான் போட்டி போடுகிறார்கள். வேறு எந்த கட்சியுடனும் பாஜக போட்டி கிடையாது, கர்நாடகா தேர்தல் தோல்வியால் ஒன்றிய பாஜக அரசு சிலிண்டர் விலையை குறைத்தது மேலும் ஐந்து மாநில தேர்தல் முடிவு வெளிவந்தவுடன் சிலிண்டருக்கு மொத்தமாக ஆயிரம் ரூபாயை குறைத்து இலவசமாக கூட அவர்கள் சிலிண்டரை வழங்குவார்கள்.
தேர்தல் நேரத்தில் கூட்டணி இட ஒதுக்கீடு குறித்து பேசி முடிவெடுக்கப்படும், அமலாக்கத்துறை சிபிஐ வருமானவரித்துறை இது அனைத்தும் பாஜகவின் அங்கமாக உள்ளது. அவர்கள் அரசாங்கத்தில் சம்பளம் வாங்கிறார்களே தவிர பாஜகவுக்கு தான் வேலை செய்கிறார்கள் என்பது வெளிப்படையாக தெரிகிறது” என்றார்.