பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் இந்தியாவில் ஜனநாயகம் செத்துவிட்டதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
பாஜக ஆட்சி ஏற்பட்ட பின்னர் கருத்து சுதந்திரம் முற்றிலும் பறிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும் ராகுல் காந்தி மீது எடுக்கப்பட்ட பழிவாங்கல் நடவடிக்கை காரணமாக இன்று அனைத்து கட்சிகளும் ராகுல் காந்திக்கு ஆதரவு தெரிவித்து அவர் பின்னால் நிற்கிறது என்றார்.
தனிநபர் ஒருவருக்காக பிரதமர் மோடி நாட்டை அடகு வைக்க வேண்டுமா? என்ற கேள்வி எழுப்பிய முத்தரசன், அதானி, மோடி உறவை மூடி மறைக்க முடியாது அதானியின் ஏஜெண்டாக பிரதமர் மோடி இருக்கிறார் என்று குற்றம் சாட்டினார்.
அண்ணாமலை பெண்களுக்கு ஆயிரம் ரூபாயை முன் தேதியிட்டு வழங்க வேண்டும் என்று கூறுகிறார். பாஜக ஆட்சி பொறுப்பு ஏற்ற போது கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொரு நபருக்கும் 15 லட்சம் ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்றும் 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தது.
அதனை செயல்படுத்த அண்ணாமலை அவரது தேசிய தலைவர்களை வலியுறுத்த வேண்டும் என்றார். பாஜக தலைவர் அண்ணாமலை முன்னுக்குப் பின் முரணாக உளறி வருவதாகவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்