தர்மபுரி பட்டாசு ஆலை வெடிவிபத்து ஏற்பட்டு 3 பேர்உயிரிழந்த சம்பவம் மிகவும் வேதனை அளிக்கிறது என காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை X தளத்தில் கூறியுள்ளார்.
தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லூர் அருகே சின்னமுறுக்கம்பட்டி கிராமத்தில் பட்டாசு வெடிவிபத்து ஏற்பட்டு 3 பேர் உயிரிழந்தார்கள் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனையும், அதிர்ச்சியும் அடைந்தேன். பட்டாசு சேகரித்து வைத்திருக்கும் ஆலைகளில் முறையான பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றாமல் இருப்பதே இதுபோன்ற விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.
கோடை காலம் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பட்டாசு ஆலைகளிலும் முழுமையாக ஆய்வு மேற்கொண்டு பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்று மாவட்ட நிர்வாகம் உறுதி செய்யப்படவேண்டும். பட்டாசு தொழில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு விபத்து மற்றும் பணிபாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
காயம் அடைந்தவர்களுக்கு உயரிய சிகிச்சையளிக்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், காயம் அடைந்தவர்களுக்கும் தாயுள்ளம் கொண்ட நமது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரிய இழப்பீடுகள் வழங்கவேண்டும். வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.