சனாதனத்தை ஒழிப்பதற்காக ஆட்சியே போனாலும் கவலை இல்லை- உதயநிதி ஸ்டாலின்
சொன்னதை செய்த மோடிக்கு வாழ்த்துகள் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “திமுக என்ற கட்சியே சனாதனத்தை ஒழிக்கதான் ஆரம்பிக்கப்பட்டது. சனாதனத்தை ஒழிப்பதற்காக ஆட்சியே போனாலும் கவலை இல்லை. ஆட்சி பற்றிக் கவலையில்லை. கொள்கைக்காக நிற்போம். தமிழ்நாட்டை வெல்லலாம் என சிலர் நினைக்கின்றனர். இந்திய ஒன்றியத்தில் எந்த மாநிலத்தில் வென்றாலும், தமிழகத்தில் வெல்ல முடியாது. அதற்கு காரணம் திமுகவும், திமுகவை வழிநடத்தும் முதலமைச்சரும்தான். அநீதியான கோட்பாடுகளை ஒழித்தே ஆக வேண்டும் என்று சொன்னால் அயோக்கியர்கள் பதறுகிறார்கள். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதை கற்பிக்கும் மதங்கள் அனைத்தையும் நாங்கள் மதிக்கிறோம்
9 வருடத்திற்கு முன்னால் இந்தியாவையே மாற்றிக்காட்டுகிறேன் என சொன்னார். இந்தியாவை மாற்றுவதாக சொன்ன மோடி, தற்போது பாரத் என்று பெயர் பலகையில் மாற்றியுள்ளார். சொன்னதை செய்த மோடிக்கு வாழ்த்துகள். டிசம்பர் 17 ஆம் தேதி சேலத்தில் நடைபெற இருக்கும் 2வது மாநில இளைஞர் அணி மாநாடு வெற்றி அடைய கழக தொண்டர்கள் அனைவரும் குடும்பத்தோடு வந்து துணை நிற்க வேண்டும்” என்றார்.