இந்தியா என்ற பெயர் மாற்றத்திற்கு பின் அரசியல் உள்ளது- கனிமொழி
இந்தியாவின் பெயரை மாற்ற வேண்டும் என்பதற்கு பின் அரசியல் உள்ளதாக திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்பி கனிமொழி, “பாரத், இந்தியா என இரண்டு பெயர்களையும் மேடையில் பயன்படுத்திக்கொண்டு தான் இருக்கிறார்கள். இன்றைக்கு புதுமையாக தேவையில்லாத சர்ச்சையை கிளப்பக்கூடிய வகையில், பாரத குடியரசு தலைவர் என்றும் இந்தியாவின் பெயரை மாற்ற போகிறோம் என்றும் கூறுகிறார்கள். இந்தியாவின் பெயரை மாற்ற வேண்டும் என்பதற்கு பின் அரசியல் உள்ளது. இதற்குப் பின்னால் இருக்கக்கூடிய அரசியலை ஆராயக்கூடிய கட்டத்தில் நாம் இருக்கிறோம். எதிர்க்கட்சிகளின் INDIA கூட்டணி, அவர்களுக்கு ஒரு அச்சத்தை ஏற்படுத்தியுள்ள சூழலில், சரித்திரத்தையே மாற்றம் செய்யும் செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
எப்போதுமே இந்தியா என்றும் இந்தியாதான். எதிர்க்கட்சிகளின் கூட்டணி பெயரே அவர்களுக்கு அச்சத்தை உண்டாக்கி இருக்கிறது. இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற வேண்டும் என சமீபத்தில் தான் ஆர்.எஸ்.எஸ். தலைவர் கூறியிருந்தார். ஒட்டுமொத்த இந்திய நாட்டிற்கான செயல்திட்டத்தை ஆர்.எஸ்.எஸ். தான் இயற்றுகிறதா? பாரத குடியரசுத் தலைவர் என்ற பெயரில் அழைப்பிதழ்கள் வந்து இதுவரை நாங்கள் பார்த்ததில்லை. அழைப்பிதழ்கள் எப்போது இந்திய குடியரசுத் தலைவர் அல்லது இந்திய பிரதமர் என்று தான் அச்சிடப்படும். இப்போது ஏன் இதை செய்தார்கள். இதற்கான உள்நோக்கம் என்ன?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.