பாஜகவை ஆர்எஸ்எஸ் தான் இயற்றுகிறதா?- கனிமொழி கேள்வி
செப்டம்பர் 18 முதல் 22 வரை நடைபெற உள்ள நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் இந்தியா என்ற பெயரை ‘பாரத்’ என பெயர் மாற்றும் மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கு ஏற்றாற்போல் குடியரசு தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள ஜி20 அழைப்பிதல் அதை உறுதிப்படுத்துகிறது. வரும் 9ஆம் தேதி இரவு 8 மணிக்கு விருந்து நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ளுமாறு சர்வதேச தலைவர்களுக்கு அழைப்பிதழ் தயாராகியுள்ளது. அதில் இந்திய குடியரசு தலைவர் (President of India) என்பதற்கு பதிலாக பாரத் குடியரசு தலைவர் (President of Bharat) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக எம்பி கனிமொழி, “பாரத குடியரசுத் தலைவர் என்ற பெயரில் அழைப்பிதழ்கள் வந்து இதுவரை நாங்கள் பார்த்ததில்லை. அழைப்பிதழ்கள் எப்போதும் ‘இந்திய குடியரசுத் தலைவர்’ அல்லது ‘இந்திய பிரதமர்’ என்று தான் அச்சிடப்படும். இப்போது ஏன் இதைச் செய்தார்கள்? இதற்கான உள்நோக்கம் என்ன? இதன் பின்னணியில் உள்ள அரசியல் என்ன?. இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற வேண்டும் என சமீபத்தில் தான் ஆர்எஸ்எஸ் தலைவர் கூறியிருந்தார். தற்போது இந்த அழைப்பிதழை பார்க்கும்போது பல கேள்விகள் எழுகிறது; ஒட்டுமொத்த இந்திய நாட்டிற்கான செயல்திட்டத்தை ஆர்எஸ்எஸ் தான் இயற்றுகிறதா?” எனக் கேள்வி எழுப்பினார்.