நடிகர் விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்து திமுகவுக்கு எதிராக ‘ஜனநாயகனாக’ மாறி வருவதால் வருவதால், அவரை ‘விஸ்வரூப நாயகன்’ கமல் மூலமாக முறியடிக்க திமுக காய்களை நகர்த்தி வருகிறது.
நடிகர் கமல்ஹாசன் கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மக்கள் நீதி மய்யத்தை தொடங்கினார். அரசியலில் இறங்கிய பிறகும் திரைப்படங்களிலும் நடித்து வந்தார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து இருந்தார். இந்த நிலையில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்றும் இதற்காக கழக நிர்வாகிகள் தீவிரமாக உழைக்க வேண்டும் என்றும் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
இன்று மக்கள் நீதி மய்யத்தின் செயற்குழு கூட்டம் நடந்தது. சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இந்த கூட்டம் நடந்தது. காலை 11.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை இந்த கூட்டம் நடந்தது. இதில் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்துகொண்டார். சட்டமன்ற தேர்தலை எப்படி எதிர்கொள்வது, எத்தனை தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பது உள்ளிட்டவை விவாதிக்கப்பட்டது.
அப்போது அவர், வரும் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து முக்கிய ஆலோசனைகளை கட்சி நிர்வாகிகளுக்கு வழங்கினார். திமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடவும், திமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்ளவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்காக தமிழகம் முழுவதும் கமல்ஹாசன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்திக்க உள்ளதாகவும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
வரும் ஜூலை மாதம் மேல்சபை எம்பியாக கமல்ஹாசன் தேர்வு செய்யப்பட உள்ள நிலையில், வரும் சட்டமன்ற தேர்தலில் இரட்டை இலக்கங்களில் தொகுதிகளை பெற்று மக்கள் நீதி மய்யம் சட்டசபைக்குள் அடியெடுத்த வைக்க முயற்சிகள் செய்ய வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியதாகவும் தெரிவித்துள்ளனர். இதேபோன்று தேர்தலை எதிர்கொள்ள நிர்வாகிகள் இப்போதே தயாராக வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டதாக கூறினர்.
சட்டசபை தேர்தல் நெருங்கும் நேரத்தில் நடிகர் கமல்ஹாசன் தீவிர அரசியலில் ஈடுபடுவார் என்றும் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். மேலும் நிர்வாகிகள் என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும், சில தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் 2026 சட்டசபை தேர்தல் தான் இலக்கு என்று அரசியலுக்கு வந்துள்ள நடிகர் விஜய் தற்போது கட்சியை பலப்படுத்தும் வேலைகளில் இறங்கியுள்ளார். தனது கடைசி படம் என்று சொல்லியிருக்கும் ஜனநாயகன் படத்தை முடித்துவிட்டு முழுநேரமும் அரசியலில் ஈடுபட உள்ளார்.
மேலும் தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் செல்ல உள்ளதாகவும், தமிழகம் முழுக்க பூத் கமிட்டிகளை அமைத்து கட்சியை பலப்படுத்தவும் விஜய் திட்டமிட்டுள்ளார். இதற்கான பணிகளும் ஒருபுறம் நடந்து வருகின்றன. இந்த சூழலில் தான், தற்போது கமல்ஹாசனும் கட்சி பணிகளை தீவிரப்படுத்தியுள்ளார். விஜய்யும் விரைவில் மக்களை சந்திக்க சுற்றுப்பயணம் செல்ல இருப்பதாக கூறியிருக்கும் நிலையில், திமுகவை ஆதரித்து கமல்ஹாசனும் சுற்றுப்பயணம் செல்ல இருக்கிறார்.