Homeசெய்திகள்திராவிடம், தமிழ்த் தேசியம், ஆரியம் –இவற்றுக்கு என்ன அர்த்தம்?

திராவிடம், தமிழ்த் தேசியம், ஆரியம் –இவற்றுக்கு என்ன அர்த்தம்?

-

- Advertisement -

தமிழ்நாடு அரசியல் களத்தில் அதிகம் உச்சரிக்கப்படும் மூன்று வார்த்தைகள் – திராவிடம், தமிழ் தேசியம், ஆரியம்.

நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் பேசும்போது ‘திராவிடமும் தமிழ்த் தேசியமும்’ எனது இரு கண்கள் என்றார். அவரது இந்தப் பேச்சு, சீமானின் நாம் தமிழர் கட்சி வட்டாரங்களில் கடும் எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியது. “திராவிடமும் தமிழ்த் தேசியமும் ஒன்றல்ல” என்றார் சீமான். இதனிடையே கஸ்தூரி பேச்சு சர்ச்சையானதைத் தொடர்ந்து ஆரியம் என்ற சொல்லும் பேசுபொருளாகியுள்ளது.

தமிழக அரசியல் களத்தில் ஆதிக்கம் செலுத்தும் இந்த மூன்று தத்துவங்கள் உணர்த்துவது என்ன?

திராவிடம் என்றால் என்ன?

தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளரும் எழுத்தாளருமான தியாகு இது தொடர்பாக விளக்கமளிக்கும்போது, “தமிழ் இலக்கியங்களிலும் ஆவணங்களிலும் நீண்ட காலமாகவே திராவிடம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப்படி திராவிடம் என்ற சொல் நீண்ட காலமாகவே புழக்கத்தில் இருந்தாலும், நவீன காலத்தில் திராவிடம் என்ற சொல்லின் பயன்பாடு 19ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் செயல்பட்ட கிறிஸ்தவ சமயப் பரப்பாளரான கால்டுவெல்லிடம் (1814 – 1891) இருந்துதான் தொடங்குகிறது.

கால்டுவெல் ஒரு மொழிக் குடும்பத்தின் பெயராக ‘திராவிடம்’ என்ற சொல்லை முன்வைத்தார். A Comparative Grammar of the Dravidian or South-Indian family of languages என்ற அவரது புகழ்பெற்ற நூலில், சமஸ்கிருதத்தின் துணையின்றி இயங்கும் வல்லமை கொண்ட ஆற்றல் தமிழுக்கு உண்டு எனக் குறிப்பிட்டதோடு, அதேபோல, சமஸ்கிருதத்தின் ஆதரவின்றி இயங்கக்கூடிய மேலும் ஐந்து மொழிகளை அடையாளம் கண்டு, அவற்றை திராவிட மொழிக் குடும்பமாக அடையாளப்படுத்தினார்.

‘திராவிட’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதற்கான காரணத்தை அந்தப் புத்தகத்தின் முன்னுரையில் குறிப்பிடுகிறார் ராபர்ட் கால்டுவெல். “இந்தப் புத்தகத்தில் திராவிடம் என்ற சொற்றொடரின் கீழ் சேர்க்கப்பட்ட சொற்கள், தென்னிந்தியாவின் பெரும்பான்மை மக்களால் பேசக்கூடிய மொழிகளைக் குறிக்கிறது. ஒரிசா, மேற்கிந்திய மாவட்டங்கள், குஜராத்தியும் மராத்தியும் பேசப்படும் தக்காணம் ஆகிய பகுதிகளைத் தவிர்த்து விந்திய மலைகள், நர்மதா நதியிலிருந்து கன்னியாகுமரி வரை தீபகற்ப இந்தியா முழுவதும் ஒரே இனத்தைச் சேர்ந்த பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்களே வசிக்கிறார்கள். ஒரே மொழியின் பல்வேறு வழக்குகளையே அவர்கள் பேசுகிறார்கள். அந்த மொழிக்கு ‘திராவிட (Dravidian)’ என்ற சொல் வழங்கப்பட்டுள்ளது” எனக் குறிப்பிடுகிறார் ராபர்ட் கால்டுவெல்.

நவீன காலத்தில் மொழிகளின் தொகுப்பை, நிலப்பகுதியை திராவிடம் என்ற சொல்லால் குறிப்பிடுவது அப்போதுதான் தொடங்கியது. ராபர்ட் கால்டுவெல் நூலுக்குப் பிறகுதான், இந்த மொழிகள் பேசப்படக் கூடிய பகுதிகள் திராவிட நாடு எனக் குறிப்பிடப்படுவது அதிகரித்தது. இந்தப் பகுதிகளும், பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் சென்னை மாகாணம் எனக் குறிப்பிடப்பட்ட பகுதிகளும் கிட்டத்தட்ட நிலவியல் ரீதியாக ஒன்றாக இருந்தன. ஆகவே அதை திராவிட நாடு எனக் கருதுவதும் இயல்பாக இருந்தது.

இதனிடையே 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரிட்டிஷ் நிர்வாகத்தில், இந்தியர்களுக்கு வேலைகள் அளிக்கப்பட ஆரம்பித்தபோது, பிராமணர்களே எல்லா வாய்ப்புகளையும் பெறுவதாகவும் பிராமணரல்லாதார் புறக்கணிக்கப்படுவதாகவும் குரல்கள் எழுந்தன. இந்தக் காலகட்டத்தில் ‘திராவிடன்’ என்ற சொல் கூடுதல் கவனம் பெற ஆரம்பித்தது. அதே தருணத்தில் டாக்டர் சி. நடேசனார், பிராமணர் அல்லாத மாணவர்கள் தங்கிப் படிக்க, ‘திராவிடன் இல்லம்’ என்ற இல்லத்தை உருவாக்கினார். பிறகு, ‘தி திராவிடியன் அசோசியேஷனும்’ உருவாக்கப்பட்டது.

இதற்குப் பிறகு, பிராமணர் அல்லாதோருக்கான தென்னிந்திய நல உரிமைச் சங்கம் உருவானது. இதற்கென வெளியிடப்பட்ட ஆங்கில இதழ் Justice என்ற பெயரிலும் தமிழ் நாளிதழ் திராவிடன் என்ற பெயரிலும் வெளியானது.

இப்படியாக, இருபதாம் நூற்றாண்டின் முதல் இருபது ஆண்டுகளில் இனம் மற்றும் மொழியியல் சார்ந்த பொருளில் வழங்கப்பட்ட திராவிடன் என்ற சொல், நீதிக் கட்சி உருவாக்கப்பட்ட நேரத்தில் தென்னிந்தியாவில் உள்ள பிராமணரல்லாத வகுப்புகளை குறிப்பிட பயன்படுத்தப்பட்டது.

இதற்குப் பிறகு, பெரியாரின் சுயமரியாதை இயக்கம் திராவிடர் கழகமாக மாறியது. அதிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகம் உருவாக, திராவிடம் என்ற சொல், அரசியல் ரீதியாக தமிழ்நாட்டில் நிலைபெற ஆரம்பித்தது” என்கிறார் தியாகு.

தமிழ் தேசியம் என்றால் என்ன?

“திராவிடன் என்பதைப் போல, தமிழ்த் தேசியம் என்ற கருத்தாக்கமும் நீண்ட காலமாகவே இருக்கிறது. சிலப்பதிகாரத்தில் தமிழ்நாடு என்ற சொல் இரு இடங்களில் இடம் பெறுகிறது. பரிபாடலிலும் ‘தண்டமிழ் வேலித் தமிழ்நாட் டகமெல்லாம்’ எனத் தமிழ்நாடு குறிப்பிடப்படுகிறது. தொல்காப்பியத்திற்கு 11ஆம் நூற்றாண்டில் உரையெழுதிய இளம்பூரணாரும் ‘நும் நாடு யாது என்றால், தமிழ்நாடு என்றல்’ என்று குறிப்பிடுகிறார்.

ராஜாஜி முதலமைச்சார் ஆனபோது, இந்தி கட்டாயப்பாடமாக்கப்பட்டது. அதை எதிர்த்து, கி.அ.பெ. விசுவநாதம், கருமுத்து தியாகராசர் உள்ளிட்டோர் கூட்டம் நடத்தினர். பெரியாரும் இதில் தீவிரமாகக் களமிறங்கினார். இந்தி எதிர்ப்புப் போராட்டம் தீவிரமடைந்தது. இதை தமிழ்த் தேசியத்தின் தொடக்கமாகச் சொல்லலாம்.

கடந்த 1938 செப்டம்பர் 11ஆம் தேதி சென்னை கடற்கரையில் நடந்த ஒரு கூட்டத்தில் சோமசுந்தர பாரதியார், பெரியார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அவர்கள் முதல் முறையாக தமிழ்நாடு தமிழருக்கே என்ற முழக்கத்தை முன்வைத்தனர்.

மொழிவழி மாநிலப் பிரிவினைக்குப் பிறகு, பெரியார் தொடர்ந்து ‘தமிழ்நாடு’ என்ற கோரிக்கையை முன்வைத்து வந்தார். ஆனால், திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்த சி.என். அண்ணாதுரை தென்னிந்தியப் பகுதிகளை உள்ளடக்கிய திராவிட நாடு கோரிக்கையை முன்வைத்தார். அண்ணாவைப் பொறுத்தவரை, ‘மொழிவழி பிரிந்து இனவழி ஒன்று சேர்வோம்’ என்றார். பல திராவிட அரசுகளுடன் சேர்ந்து திராவிட கூட்டமைப்பை உருவாக்குவோம் என்றார். திராவிட நாடு கோரிக்கையை 1960களில்தான் அண்ணா கைவிட்டார். அதற்குப் பிறகு, தமிழ்நாட்டை முன்னிறுத்தியே திராவிடக் கட்சிகள் செயல்படுகின்றன.

கடந்த 1930களில் மட்டுமின்றி, அதற்குப் பின்வந்த காலங்களிலும் தமிழ்த் தேசியம் என்ற கருத்தாக்கத்தைப் பல தலைவர்கள் உயர்த்திப் பிடித்தனர். “தமிழர் ஒரு தனி தேசிய இனம், தமிழ்நாடு தமிழர்களின் தாயகம்” என்ற முழக்கத்துடன் செயல்பட்ட ம.பொ.சிவஞானம், மாநிலங்கள் மொழிவழியில் பிரிக்கப்பட்டபோது, எல்லைகளைக் காப்பதற்காகப் போராட்டங்களை நடத்தினார். அதேபோல, சி.பா. ஆதித்தனாரும் நாம் தமிழர் இயக்கத்தைத் தொடங்கி, தனித் தமிழ்நாடு வரை பேசினார். இவர்கள் இருவரும் பிற்காலங்களில் திராவிடக் கட்சிகளோடு இணைந்து செயல்பட்டனர்.

என்னைப் பொறுத்தவரை, திராவிடக் கொள்கையும் தமிழ்த் தேசியக் கொள்கையும் ஒன்றுக்கொன்டு இசைவானவை. திராவிடத்தின் சமூக நீதி கொள்கை இல்லாமல் தமிழ்த் தேசியம் வெற்றி பெற முடியாது. தமிழ்நாடு சுயநிர்ணய உரிமையை அடைந்தால் சாதியை ஒழிக்க முடியும். ஆகவே, ஒன்றை வைத்துதான் மற்றொன்று இருக்கிறது” என்கிறார் தியாகு.

ஆரியம் என்றால் என்ன?

திராவிட இயக்கங்களால் திராவிடத்திற்கு எதிராக முன்வைக்கப்படும் கருத்தாக்கம் ஆரியம். ஆரியர்களாக பிராமணர்களை சுட்டிக் காட்டுகின்றன திராவிட இயக்கங்கள்.

இது சரியானதுதானா?

‘இந்தியாவின் முந்தைய நாகரிகமாக, வடமேற்கில் இருந்தது சிந்துவெளி நாகரிகம். எகிப்திய, மெசோபோடாமிய நாகரிக காலகட்டத்தை சேர்ந்தது, சிந்துவெளி நாகரிகம். இந்த நாகரிகம் வீழ்ச்சி அடைந்தபின் வெளியே இருந்து வந்த ஆரியர்கள் இந்த பகுதிக்கு வந்தனர்’ என்பது திராவிட ஆராய்ச்சியாளர்கள் வாதம்.

ஆனால், ஆரியர்கள் என்று தங்களை அழைத்துக்கொள்ளும் இந்துத்துவ ஆய்வாளர்கள் இதை மறுக்கிறார்கள். ” எங்கள் பிறப்பிடம் இந்தியாதான். இங்கிருந்தே ஆசியா, ஐரோப்பா ஆகிய நாடுகளுக்கு பரவினோம். இப்போது இந்தியா மற்றும் ஐரோப்பாவில் பேசப்படும் இந்தோ – ஐரோப்பிய மொழிகளை உருவாக்கியது தாங்கள்தான். இந்திய நாகரிகம் ஆரியர்களால் உருவாக்கப்பட்டது தான். கால்நடை மேய்க்கும், குதிரை ஓட்டும் நாடோடி இனக்குழுவான ஆரியர்கள் தான் இந்திய நாகரிகத்தை கட்டி எழுப்பியது. ஆரியர்கள் தான் வேதங்களை எழுதினர். ஹரப்பன் (சிந்துவெளி) நாகரிகமும் ஆரிய நாகரிகம்தான், வேத நாகரிகம்தான் என்பது அவர்கள் வாதம்.

இந்த இரு தரப்பு வாதங்கள் இடையே, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மரபணுவியலாளர் டேவிட் ரெய்ச்சின் ஆய்வு முடிவானது 2018ஆம் ஆண்டு மார்ச்சில் வெளியானது. உலகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த, வரலாறு, தொல்லியல், மானுடவியல், மரபணுவில் என பல்வேறு துறைகளைச் சேர்ந்த 92 அறிஞர்கள் இந்த ஆய்வில் பணியாற்றியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த ஆய்வு கடந்த 10 ஆயிரம் ஆண்டுகளில் இரண்டு மிகப்பெரிய குடிப்பெயர்வு நடந்துள்ளது என சொல்கிறது. “முதல் குடிப்பெயர்வானது தென்மேற்கு இரான் பகுதியில் உள்ள ஜக்ரோஸிலிருந்து நடந்திருக்கிறது. அதாவது, அங்கிருந்து இந்தியாவுக்கு விவசாயிகளாகவும் ஆடு மேய்ப்பவர்களாகவும் வந்திருக்கிறார்கள். இந்த குடிபெயர்வானது 7000 மற்றும் 3000 ஆண்டுகளுக்கு (இயேசு பிறப்பதற்கு முன்பு) இடையேயான காலக்கட்டத்தில் நடந்திருக்கிறது.

இந்த கால்நடை மேய்ப்பவர்கள், இதற்கு முன்பு இந்திய பகுதிக்கு வந்த அதாவது 65 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, ஆப்பிரிக்காவை விட்டு வெளியேறி வந்த மக்களுடன் கலந்திருக்கிறார்கள். இவர்களே சிந்துவெளி நாகரிகத்தை உருவாக்கியவர்கள்.

இந்திய மக்களின் மரபணுவை சோதனை செய்தால், அது 50 முதல் 65 சதவீதம் இந்த முதல் முதலாக இந்தியாவிற்குள் குடிப்புகுந்தவர்கள் மரபணுவை ஒத்து இருக்கிறது.

இரண்டாவது குடிபெயர்வு கிறிஸ்து பிறப்பதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்திருக்கிறது. இந்த இரண்டாவது வந்தவர்கள் ஆரியர்கள். இது இன்றைய கஜகஸ்தான் பகுதியிலிருந்து வந்திருக்கலாம். குதிரை செலுத்துவதில் வல்லுநர்களான இவர்கள் சமஸ்கிருதத்தின் முந்தைய மொழி வடிவத்தை கொண்டு வந்திருக்கிறார்கள். பலியிடும் பழக்கத்தையும் வேத பண்பாட்டையும் உருவாக்கியது இவர்களே” என்கிறது இந்த ஆய்வு.

எது என்னவாக இருந்தாலும், இந்திய மக்கள் தங்கள் நாகரிகத்தை பல இனம் மற்றும் வரலாற்றிலிருந்து உருவாக்கி இருக்கிறார்கள் என்பதே இன்றைய நிஜம். எனவே, திராவிடன், தமிழன், ஆரியன் என பிரிந்து மோதாமல் ‘வேற்றுமையில் ஒற்றுமையே’ என வாழ்வதே நல்லது.

MUST READ