கூட்டணி பற்றி பாஜக தேசிய தலைமையே முடிவு செய்யும் – எடப்பாடி பழனிசாமி
அதிமுகவுடனான கூட்டணி இறுதியாகிவிட்டதாக தற்போதே கூறமுடியாது என அண்ணாமலை கூறிய நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார்.
அண்மையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “கூட்டணியில் இருக்கிறோம் என்று அமித்ஷா கூறினாரே தவிர கூட்டணியை உறுதி செய்யவில்லை. தேர்தலுக்கு 9 மாதங்கள் உள்ள நிலையில், தற்போது கூட்டணி குறித்து எதுவும் கூற இயலாது. கூட்டணி குறித்த இறுதி முடிவை பாஜக தேசிய தலைமைதான் எடுக்கும். அரசியலில் கல்லில் எழுதப்பட்ட வார்த்தைகள் கிடையாது. தண்ணீரில் எழுதப்பட்ட வார்த்தைகள்தான் அதிகம்” எனக் கூறினார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “கூட்டணி குறித்து பாஜக உயர்மட்ட தலைவர்கள்தான் முடிவு செய்வார்கள். மாநிலத்தில் உள்ள பாஜக நிர்வாகிகள் கூட்டணி குறித்து முடிவு செய்வதில்லை. மத்தியில் இருப்பவர்கள்தான் கூட்டணியை முடிவு செய்வார்கள், கூட்டணி குறித்து பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர், நாடாளுமன்றத் தேர்தலுடன், சட்டமன்ற தேர்தல் வரும் என எதிர்பார்க்கிறோம். அதிமுகவில் இருந்து விலகிய ஒரு சிலரை தவிர அனைவரும் மீண்டும் இங்குவந்து இணைய வேண்டும் என்பதே எனது விருப்பம்” என்றார்.