மக்கள் நிகழ்வாக மாற்றப்பட்ட ஜி20 – வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அறிக்கை
டெல்லியில் நாளை தொடங்கவுள்ள ஜி20 மாநாட்டையொட்டி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அறிக்கை.
இந்தியாவின் ஜி20 தலைமைத்துவம் பல்வேறு வழிகளில் தனித்துவமானது என்பதை நிரூபித்துள்ளது. இது வளரும் நாடுகளின் முன்னுரிமைகளிலும் கவனம் செலுத்தியுள்ளது. உலகலாவிய தெற்கின் குரலை ஓங்கி ஒலித்துள்ளது. பருவநிலை நடவடிக்கை மற்றும் நிதி, எரிசக்தி மாற்றங்கள், நீடிக்க வல்ல வளர்ச்சி இலக்குகள், அமலாக்கம், தொழில்நுட்ப மாற்றம் போன்ற துறைகளில் குறிக்கோளை வலுப்படுத்தியுள்ளது. இந்தியாவை ஓர் அசாதாரண ஜி20 தலைமைத்துவமாக மாற்றுவதற்குக் கூடுதலாக செய்யப்பட்டது என்னவென்றால் ஜி20 தொடர்பான பல்வேறு நிகழ்வுகள் மற்றும் நடவடிக்கைகளில் நாடு முழுவதிலுமிருந்து பெருமளவில் மக்களைப் பங்கேற்கச் செய்ததாகும். தலைமைத்துவம் என்பது அரசின் உயர் பதவிகளோடு நிறுத்தப்படுவதல்ல. பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த மக்களின் ஆர்வம் மிக்கப் பங்கேற்பின் மூலம் இந்தியாவின் ஜி20 உண்மையிலேயே மக்கள் ஜி20 ஆக மாறியுள்ளது.
60 நகரங்களில் சுமார் 220 கூட்டங்கள், ஜி20 கூட்டங்களில் ஏறத்தாழ 30000 பிரதிநிதிகள், இவற்றின் துணை நிகழ்வுகளில் 1,00,000க்கும் அதிகமான பங்கேற்பாளர்கள், நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் மக்களின் ஈடுபாடு என ஜி20 எண்ணற்ற வழிகளில் மக்களை ஈடுபடுத்தியது. மாநில அளவிலும், மாவட்டம், வட்டம், பஞ்சாயத்து மற்றும் பள்ளிக்கூடம் வரையிலும் என பல நிலைகளில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுகள் ஜி20 விழிப்புணர்வை அதிகரித்தன. இந்த நிகழ்வுகள் 15.7 கோடி மாணவர்கள், 25.5 லட்சம் ஆசிரியர்கள், 51.1 லட்சம் சமூக உறுப்பினர்கள் என 23.3 கோடி பேரின் கவனத்தை ஈர்த்தன.
நாடு முழுவதும் ஜி20 மாநாட்டைக் கொண்டாடுவதன் மூலம் இந்தியாவிற்கும் உலகிற்கும் பயனளிக்கும் நாடு தழுவிய ஓர் அனுபவத்தை உருவாக்க நாம் முயற்சித்துள்ளோம். இது இந்தியாவை உலகத்திற்குத் தயார் செய்துள்ளது. உலகை இந்தியாவுக்கு தயார் செய்துள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.