Homeசெய்திகள்அரசியல்சீக்கிரமா நடக்கட்டும்... ரகசிய உத்தரவு... ஆளுநர் ஆர்.என்.ரவி விரைவில் மாற்றம்..?

சீக்கிரமா நடக்கட்டும்… ரகசிய உத்தரவு… ஆளுநர் ஆர்.என்.ரவி விரைவில் மாற்றம்..?

-

தமிழகத்தில் திமுக அரசு பதவியேற்ற பிறகு புதிய ஆளுநராக ஆர்.என்.ரவியை மத்திய அரசு நியமித்தது. அன்று முதலே தமிழக அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. ஆரம்பத்தில் தமிழக அரசிற்கும் ஆளுநர் ரவிக்கும் இடையே சுமூகமான உறவு நீடித்த நிலையில் நீட் மசோதாவை கிடப்பில் போட்ட பிறகு மோதல் தொடங்கியது. ஆளுநர் அளித்த தேநீர் விருந்தை தமிழக அரசு புறக்கணித்தது. இதேபோன்று ஆளுநர் ரவியும் அரசு விழாக்களில் தமிழக அரசுக்கு எதிராக கருத்துகளை கூறுவது. பட்டமளிப்பு விழாவில் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தங்களை பரப்புவது என அரசியல் கட்சிகளால் குற்றச்சாட்டிற்கு ஆளானார்.

அடுத்ததாக தமிழக சட்டப்பேரவையில் 0தமிழக அமைச்சரவை ஒப்புதல் கொடுத்த ஆளுநர் உரையை வாசிக்காமல் இரண்டு ஆண்டுகள் சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார். மேலும் தமிழ் தாய் வாழ்த்திற்கு பதிலாக தேசிய கீதம் பாட வேண்டும் என்ற கருத்தை கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். தமிழ்நாடு என்று அழைத்து வந்ததை தமிழகம் என மாற்ற முயற்சித்தார். இதனால் ஏற்பட்ட கண்டனங்களை தொடர்ந்து அந்த முடிவில் இருந்து பின்வாங்கினார்.

தமிழக முதலமைச்சரை விட தனக்கே அதிகாரம் இருப்பது போல் அமைச்சரை பதவியில் இருந்து நீக்கியும் உத்தரவிட்டார். ஆனால் மத்திய அரசு கொடுத்த அழுத்தத்தின் காரணமாக தனது முடிவை வாபஸ் வாங்கினார். இது போன்று பல்வேறு சர்ச்சை கருத்திற்கு சொந்தக்காரரான ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் ஜூலை மாதம் முடிவடைந்தும் தொடர்ந்து நீடித்து வந்தார்.

சமீபத்தில் சென்னை சேப்பாக்கம் டிடி அலுவலகத்தில் இந்தி மாதம் கொண்டாட்டங்களின் நிறைவு விழா மற்றும் சென்னை தொலைகாட்சி பொன்விழா நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய போது “தெக்கணமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும்” என்ற வரியை விட்டு பாடியது அங்கிருந்தவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதற்கு முதல்வர் ஸ்டாலின் ஆளுநருக்கு எதிராக கடும் கண்டனம் தெரிவித்தது மட்டுமல்லாமல் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும் வேண்டுமென்றே தொடர்ந்து அவமதித்து வரும் ஆளுநரை மத்திய அரசு உடனடியாகத் திரும்ப பெறவேண்டும் என காட்டமாக கூறியிருந்தார்.

இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அது வதந்தி என்று ராஜ்பவன் வட்டாரங்கள் அடித்துக் கூறுகின்றன.

ஆளுநர்கள் நியமிக்கப்பட்ட காலத்தில் இருந்து 5 ஆண்டுகள் பதவியில் இருக்கலாம் என அரசியல் சாசனத்தின் `156வது விதி வரையறுத்துள்ளது. இருப்பினும், ஐந்து ஆண்டுகள் முடிந்தவுடனே அவர்களது பதவி காலம் என்பது முடிவடையாது. அடுத்த ஆளுநரை குடியரசுத் தலைவர் நியமனம் செய்யும் வரை ஆளுநராக இருப்பவர் பதவியில் தொடரலாம். அதனடிப்படையில், தமிழக ஆளுநராக இருக்கும் ஆர்.என்.ரவியின் 5 ஆண்டு பதவி காலம் ஏற்கனவே முடிவடைந்துவிட்டது. ஆனாலும் இதுவரை குடியரசுத் தலைவர் தமிழ்நாட்டிற்கு புதிய ஆளுநரை அறிவிக்காததால் அவரே ஆளுநராக தொடர்கிறார்.

ஆர்.என்.ரவி கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் 18ஆம் தேதி தமிழக ஆளுநராக பதவியேற்றார். ஆனால் அவர் 2019ல் குடியரசுத் தலைவரால் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு மேகலாயா மற்று நாகலாந்திலும் பணியாற்றிய காலத்தை கணக்கில்கொண்டால் அவரது பதவி காலம் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னரே முடிவடைந்துவிட்டது.

ஐந்தாண்டுகள் பதவி காலத்தை முடித்த ஆளுநர்களை திரும்ப பெற்றுக்கொண்டு அவர்களுக்கு பதில் புதியவர்களுக்கு ஆளுநர்களாக வாய்ப்பு கொடுக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, கேரளா, தமிழ்நாடு ஆளுநர்களின் பெயர்கள் இந்த பட்டியலில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆர்.என்.ரவிக்கு பதில் புதிய ஆளுநராக வி.கே.சிங் நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது. இவர் இந்திய ராணுவத்தின் முன்னள் தளபதியாக பதிவு வகித்தவர். மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்தவர். மத்திய பாஜக அரசில் பிரதமர் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர். 2021 சட்டப்பேரவை தேர்தலில் தமிழக பாஜக மேலிட இணை பொறுப்பாளராக இவரை பாஜக தலைமை அறிவித்தது. இவரது கண்காணிப்பிலேயே கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வேலூர், சிவகங்கை, கன்னியாகுமரி, நெல்லை ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டது. ஆகையால் தமிழக அரசியல் நிலவரம் பற்றி அறிந்தவர் என்பதால் இவருக்கு வாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது.V.K.Singh

ஆனால், இப்படியான செய்திகள் வெறும் வதந்தி என்றும் ஆர்.என்.ரவியே வரும் 2026ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டின் ஆளுநராக தொடருவார் என்றும் ராஜ்பவன் வட்டாரங்கள் கூறுகின்றன. ஆர்.என்.ரவியை மாற்றுவது தொடர்ந்த எந்த சமிஞ்கையும் ஆளுநர் மாளிகையில் இதுவரை தெரியவில்லை என்றும் தெரிகிறது. ஆனால் இதுவரை பட்டமளிப்பு விழாக்களில் எப்போதாவது பங்கேற்று வந்த ஆளுநர் ரவி, இப்போது அதிக பட்டமளிப்பு விழாக்களில் கலந்து கொண்டு வருகிறார். மேலும் அடுத்த 10ம் தேதிக்குள் பெரும்ப்பாலான பட்டமளிப்பு விழாக்களை முடித்துவிட வேண்டும் என ஆளுநர் மாளிகை அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளர் என்றும் கூறப்படுப்படுகிறது.

ஏன் இந்த அவசரம்..? மாற்றப்பட வாய்ப்புள்ளதுதான் காரணமா? என ஆளுநர் மாளிகை அதிகாரிகளிகளே காதுகடித்துக் கொள்கிறார்கள்.

MUST READ