அரியானாவில் தேர்தல் பிரச்சாரம் இன்றே கடைசி – காங்கிரஸ் கட்சிக்கும் பாஜக விற்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
அரியானா மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை முடிவடைகிறது. அக்.5ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று அக்டோபர் 8ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
வடமாநிலங்களில் மிகவும் முக்கியமானதாக அரியானா இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக இம்மாநிலத்தில் பாஜக கட்சி அதிகாரத்தில் இருந்து வருகிறது. இது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இதை பயன்படுத்தி எப்படியாவது ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிவிட வேண்டும் என்று காங்கிரஸ் தீவிரமாக திட்டமிட்டு வேலை பார்த்து வருகிறது. காங்கிரஸின் யுக்திகள் நாடாளுமன்ற தேர்தலில் கைகொடுத்தன.
ஹரியானாவில் உள்ள 10 மக்களவை தொகுதிகளில் காங்கிரஸ், 5ல் வெற்றி பெற்றது. இது பாஜகவுக்கு பெரிய அடிதான். 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்துவிட்டு, பாதிக்கு பாதி சீட்டை மட்டுமே பாஜக வென்றிருப்பது அக்கட்சி தலைமையிடத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அரியானா மாநிலத்தில் உள்ள 90 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக அக். 5ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக இந்த மாநிலத்தில் பாஜக ஆட்சியை தக்க வைத்திருக்கிறது. இருப்பினும் இந்த தேர்தல் பாஜகவுக்கு சவாலானதாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தல் முடிவுகளும் கூட, இதையே பிரதிபலித்தன. அதாவது மொத்தமுள்ள 10 தொகுதிகளில் 5ஐ காங்கிரஸ் கைப்பற்றியது.
சட்டமன்ற தேர்தல் போட்டியை பொறுத்த வரை, பாஜக தனியாகவும், காங்கிரசும்-சிபிஎம் கட்சியும் ஒரு கூட்டணியாகவும், ஜனநாயக ஜனதா கட்சியும்-ஆசாத் சமாஜ் கட்சி (கன்ஷி ராம்) ஒரு கூட்டணியாகவும், இந்திய தேசிய லோக் தளம்-பகுஜன் சமாஜ் கட்சி ஒரு கூட்டணியாகவும் களம் காண்கிறது. தவிர ஆம் ஆத்மி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை தனித்தனியாக களம் காண்கின்றன.
பாஜகவின் முதல்வர் முகமாக, தற்போதைய முதல்வர் நயாப் சிங் சைனியும், காங்கிரஸின் முதல்வர் முகமாக பூபேந்தர் சிங் ஹுடாவும் களமிறங்கியுள்ளனர். அரியானவை பொறுத்தவரை பிரச்னைகளுக்கு பஞ்சம் இல்லாத மாநிலங்களாக இருக்கிறது.
குறிப்பாக விவசாயிகளின் பிரச்னை, வேலையின்மை, அக்னிவீரர் திட்டம், பணவீக்கம், மல்யுத்த வீரர்களின் போராட்டம் என எல்லா துறைகளிலும் பஞ்சாயத்துகள் வெடித்து கிளம்பியுள்ளன.
விவசாயிகளை பொறுத்தவரை, மோடி 2.O அரசின்போது கொண்டுவரப்பட்ட 3 வேளாண் சட்டங்கள் விவசாயிகள் மத்தியில் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. இந்த சட்டங்களுக்கு எதிராக நடைபெற்ற டெல்லி போராட்டத்தில், ஹரியானா விவசாயிகளின் பங்கு அளப்பரியதாக இருந்தது. சமீபத்தில் கூட கங்கனா ரனாவத் வேளாண் சட்டங்கள் குறித்து கருத்து தெரிவித்தபோது, தங்களுக்கும், ரனாவத்தின் கருத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என பாஜக விலகிக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
அதேபோல இந்த மாநிலத்தில் வேலையின்மை, தேசிய சராசரியை விட அதிகமாக இருக்கிறது. புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க கொள்கை முடிவுகளை அரசு எடுக்க வேண்டும் என்று இம்மாநில இளைஞர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மறுபுறம் மல்யுத்த வீராங்கனைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் பிரச்னை இம்மாநில அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன. இந்த பிரச்னைக்கு எதிராக குரல் கொடுத்த வினேஷ் போகத் தற்போது காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக களம் இறக்கப்பட்டிருக்கிறார்.
மட்டுமல்லாது, கேலோ இந்தியா விளையாட்டுகளுக்காக குஜராத்துக்கு அதிக நிதி ஒதுக்கிவிட்டு, விளையாட்டு வீரர்கள் அதிகம் உள்ள ஹரியானா மாநிலத்திற்கு குறைவான நிதி ஒதுக்கியதும் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருந்தது. இவ்வளவு பிரச்னைகளுக்கு மத்தியில்தான் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்காக இன்றுடன் இறுதிக்கட்ட பிரசாரம் நிறைவடைகிறது. அக்.5ம் தேதி தேர்தல் நடைபெற்று, அக்.8ல் முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.