ஸ்ரீவில்லிப்புத்தூர் கோயிலில் இசைஞானி இளையராஜா கோயில் கருவறைக்குள் நுழைய முயன்றபோது, தடுத்து நிறுத்தப்பட்டதாக எழுந்த விவகாரம் தொடர்பாக தமிழக இந்து சமய அறநிலையத்துறை விளக்கமளித்துள்ளது.
இசைஞானி இளையராஜா ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவிலுக்கு வந்தபோது நடந்தது என்ன என்பது பற்றி, மதுரை மண்டல இணை கமிஷனர் செல்லதுரை, விருதுநகர் கலெக்டருக்கு அறிக்கை அளித்துள்ளார். அந்த அறிக்கையில், ‘விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர் அருள்மிகு நாச்சியார் (ஆண்டாள்) திருக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை சட்டப்பிரிவு 46(ii)– ன் கீழ் உள்ள திருக்கோயில் ஆகும். இத்திருக்கோயிலானது முதல் நிலை செயல் அலுவலர் மற்றும் தமிழக அரசால் நியமனம் செய்யப்பட்ட அறங்காவலர் குழு கூட்டுப் பொறுப்பில் நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது.
இத்திருக்கோயிலில் ஆண்டாள் ரெங்கமன்னார், கருடாழ்வார், மூலவர் கருவறையிலும், கருவறையினை அடுத்த அர்த்த மண்டபத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார், கருடாழ்வார் உற்சவரும் எழுந்தருளியுள்ளனர். இத்திருக்கோயில் மரபு படியும், பழக்க வழக்கபடியும் அர்த்த மண்டபம் வரை திருக்கோயிலின் அர்ச்சகர், பரிசாரகர் மற்றும் மடாதிபதிகள் தவிர இதர நபர்கள் அனுமதிக்கப்படும் வழக்கமில்லை.
டிசம்பர் 15ம் தேதி அன்று இசையமைப்பாளர் இளையராஜா ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ திரிதண்டி ஸ்ரீமன் நாராயண சின்ன ராமானுஜ ஜீயர் சுவாமிகள் உடன் வருகை புரிந்தபோது அவருடன் இணைந்து அர்த்த மண்டப வாசல் படி ஏறிய போது உடன் இருந்த ஜீயர் சுவாமிகள் மற்றும் திருக்கோயில் மணியம் அர்த்த மண்டபம் முன்பு இருந்து சாமி தரிசனம் செய்யலாம் என கூறிய உடன் அவரும், ஒப்புக் கொண்டு அர்த்த மண்டபத்தின் முன்பு இருந்து சுவாமி தரிசனம் செய்தார் என்றும், ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ திரிதண்டி ஸ்ரீமன் நாராயண சின்ன ராமானுஜ ஜீயர் சுவாமிகள் மட்டும் அர்த்த மண்டபத்தின் உள்ளே சென்று சுவாமி தரிசனம் செய்தார் என்ற விவரம் பணிவுடன் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.