“ஒரு நடிகரின் பின்னால் ஆட்டு மந்தை போல் இளைஞர்கள் திரும்புவார்கள் என்றால், அந்த இளைஞர்கள் எங்களுக்குத் தேவையில்லை” என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், நடிகர்கள் கட்சி ஆரம்பிக்கும் போதெல்லாம் ஊடகங்கள் ஒரு செய்தியை எழுதுவார்கள். விஜயகாந்த் கட்சி தொடங்கிய போது விடுதலை சிறுத்தைகள்தான் பலவீனப்படும் என்று கருத்து சொன்னவர்கள் உண்டு. ஊடகங்களில் விவாதித்தவர்கள் உண்டு. ஆனால் விடுதலைச் சிறுத்தைகள் தனித்தனிமையோடு அதே வீரியத்தோடு இந்த களத்தில் இருந்து நீடித்து நிற்கிறது என்பதுதான் வரலாறு.
அப்போதே நான் சொன்னேன். யார் யார், புதிய புதிய கட்சிகளை தொடங்கினாலும், அவர்களுக்கு என்ன செல்வாக்கு இருந்தாலும், விடுதலை சிறுத்தைகளை அவர்களால் சேதப்படுத்த முடியாது. அதற்கு காரணம் இந்த களம் முற்றிலும் புதியது. இந்த இயக்கத்தின் கொள்கையை கோட்பாடு என்பது முற்றிலும் புதிது. அந்த அடிப்படையில் தான் திருமாவளனுக்கும் இயக்கத் தோழர்களுக்கும் பிணைப்பு இருக்கிறது.
எனவே சினிமா கவர்ச்சியின் மூலமாக இந்த இளைஞர்களை யாராலும் திசை மாற்றிட முடியாது என்று அப்போதே நான் சொன்னேன். அதை உண்மை என்பதை காலம் உணர்ந்து இருக்கிறது. இன்றைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒரு மாநில கட்சியாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இப்போதும் அதை சொல்கிறார்கள். நடிகர் ஒருவர் கட்சி தொடங்கி விட்டார். இந்த இளைஞர்கள் எல்லாம் அந்த நடிகர் ஆரம்பித்த கட்சி பக்கம் ஆட்டு மந்தைகளைப் போல் திரும்புவார்கள் என்கிறார்கள்.
ஒரு நடிகரின் பின்னால் இளைஞர்கள் அப்படி திரும்புவார்கள் என்றால் அந்த இளைஞர்கள் திருமாவளவனுக்கு தேவையில்லை. அப்படிப்பட்ட இளைஞர்களை வடிகட்டி வெளியேற்றுவதுதான் கட்சிக்கு சிறப்பு. புரட்சியாளர் அம்பேத்கர் ஈடுபாடு கொண்டு பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரை ஏற்றுக்கொண்டு, பாட்டாளி வர்க்கத்தின் கோட்பாட்டை வழங்கிய மாமேதை காரல் மார்க்ஸ் அவர்களையும் புரிந்து கொண்டு திருமாவளவன் பின்னால் வருபவர்கள்தான் உண்மையான சிறுத்தைகளாக இருக்க முடியும்.
அவர்கள்தான் எனக்கு தேவை. அவர்கள்தான் எப்போதும் என்னோடு பயணிக்கக் கூடியவர்கள். அவர்களை எந்த கொம்பனாளையும் ஈர்க்க முடியாது. திசை மாற்ற முடியாது. இங்கே தலைவர்கள் சொன்னதைப் போல தேர்தல் அரசியலுக்கு விசிக வந்து 25 ஆண்டு காலம் கடந்த நிலையிலும் ஒரு பட்டாளத்தை அப்படியே கட்டுக்கோப்பாக வைத்திருக்கிற இயக்கம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. அதே எழுச்சி, அதே உணர்ச்சி, அதே வீரியம், அதே வேட்கை விடுதலைச் சிறுத்தைகளிடம் இன்றைக்கும் மேலிடுகிறது. அதில் எந்த தொய்ய்வும் இல்லை. சரிவும் இல்லை” என அவர் தெரிவித்துள்ளார்.