”தமிழ்நாட்டுக்கு 50 விழுக்காடு மட்டும்தான் என்று ஒரு தீர்ப்பு கொடுப்பார்கள். அப்படி வந்தால் தமிழ்நாட்டில் என்ன நடக்கும்? திமுக ஆட்சி அடுத்த நாளே போய்விடும்” என பாமக தலைவர் அன்புமணி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவை ஏற்பாடு செய்த கூட்டம் சென்னை, தியாகராயர் நகர், ஜி.என்.செட்டி சாலையில் உள்ள அக்கார்ட் விடுதியில் இன்று நடைபெற்றது.
அப்போது பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்,”1984 இல் கலைஞர் ஒரு கணக்கெடுப்பு நடத்தினார். அதையெல்லாம் ஒருங்கிணைத்து ஜனார்த்தனன் அவர்கள் 69 விழுக்காடுக்கு மேல் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள் என உச்ச நீதிமன்றத்தில் ஓரளவு உறுதி செய்தார். அதனால்தான் உச்ச நீதிமன்றம் அமைதியாக இருந்து விட்டது. அமைதியாக இருக்கிறார்களே தவிர அந்த வழக்கு இன்றும் இருக்கிறது. அதன் பிறகு 2017ல் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போட்டார். 2018 இன்னொருவர் வழக்குப்போட்டார். அப்போது உச்சநீதிமன்றம் என்ன சொன்னது என்றால் மகாராஷ்டிராவில் மராட்டா வழக்கு இருக்கிறது. அந்த வழக்கு முடிந்தவுடன் நாங்கள் தமிழ்நாட்டு வழக்கை எடுத்துக் கொள்கிறோம் என்று உச்ச நீதிமன்றம் சொன்னது.
இப்போது மராட்டா வழக்கு முடிந்த முடிவடைந்து விட்டது. தமிழ்நாட்டு வழக்கு எப்போது வேண்டுமானாலும் வரும். எப்போது வேண்டுமானாலும் எடுப்பார்கள். எடுத்தவுடன் உச்ச நீதிமன்றம் என்ன கேட்பார்கள் என்றால் கணக்கெடுப்பு நடத்தி இருக்கிறீர்களா? உங்களால் நியாயப்படுத்த முடியுமா? தமிழ்நாட்டில் 69 விழுக்காடு மக்கள் எஸ்சி, எஸ்டி, ஓபிசி, பிசி இருக்கிறார்களா என்று கேட்பார்கள். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்ன சொல்வார் ? இல்லை என்று தான் சொல்வார்.
அப்போது உச்ச நீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்கும் என்றால் 69% நாங்கள் தள்ளுபடி செய்கிறோம். தமிழ்நாட்டுக்கு 50 விழுக்காடு மட்டும்தான் என்று ஒரு தீர்ப்பு கொடுப்பார்கள். அப்படி வந்தால் தமிழ்நாட்டில் என்ன நடக்கும்? திமுக ஆட்சி அடுத்த நாளே போய்விடும். ஏனென்றால் நாங்கள் எல்லாம் சும்மா இருக்க மாட்டோம். மேடையில் இருப்பவர்கள் எல்லாம் சும்மா இருக்க மாட்டார்கள். தமிழ்நாடு கலவர பூமியாக மாறும்” என எச்சரித்துள்ளார் அன்புமணி.