”அடுத்த முதலமைச்சர் இவர்தான் என்று ஊடகங்களே வரிந்து கட்டிக்கொண்டு வழிந்து வழிந்து செய்திகளை ஊதி ஊதி பெரிது ஆக்குகிறார்கள்” என விசிக தலைவர் திருமாவளவன் மறைமுகமாக விஜயை தாக்கிப்பேசியுள்ளார்.
இதுகுறித்துப் பேசிய திருமாவளவன், ”இன்றைக்கு கட்சி ஆரம்பித்தாலே அடுத்த முதல்வர் இவர்தான் என ஆகா ஓகோ என்று யூகங்களை எல்லாம் பெரிய பெரிய செய்திகளாக மாற்றுகிறார்கள். இப்போதே 20 சதவீதம் 24 சதவீதம் என்று எழுதுகிறார்கள். அடுத்த முதலமைச்சர் இவர்தான் என்று ஊடகங்களே வரிந்து கட்டிக்கொண்டு வழிந்து வழிந்து செய்திகளை ஊதி ஊதி பெரிதாக்குக்கிறார்கள்.
இன்னும் ஒரு தேர்தலில்கூட நிற்கவில்லை. வாக்குகள் எவ்வளவு என்பது யாருக்கும் தெரியாது. ஆனாலும், இந்தச் சமூகமும், இந்த ஊடகமும் எத்தகைய அணுகுமுறைகளை கொண்டு இருக்கின்றன என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட இந்த சமூகத்தில்தான் அங்குலம் அங்குலமாக போராடிப் போராடிப் போராடிப் போராடி… இன்று இந்த அங்கீகாரத்தை நாம் பெற்று இருக்கிறோம். மற்றவன் எல்லாம் 100 மீட்டர் ஓடிப் பரிசு வாங்கி விடுவான். நாம் 1,000 மீட்டர் ஓடினால் தான் அந்தப் பரிசை வாங்க முடியும்.
இசை நாம் விடாமல் பத்தாயிரம் மீட்டர் ஓடினால்தான் நம்மால் இந்தப் பரிசு வாங்க முடியும். இப்படி ஒரு கேடுகெட்ட சமூகத்தில் நாம் களம் ஆடிக் கொண்டு இருக்கிறோம். ஒரு கட்சியாக ஏற்காமல் அதை புறந்தள்ளுகிற ஒரு சமூகத்தில் நாம் இருக்கிறோம். நமக்குப் பின்னர் எத்தனை கட்சி தோன்றினாலும் அந்த கட்சியை முன்னாள் எழுப்பி, நம் கட்சியை பின்னால் எழுதுகிற உளவியல் கொண்டவர்களின் ஆதிக்கம் நிறைந்த சமூகத்தில் நாம் போராடிக் கொண்டிருக்கிறோம்.
எத்தனை பேர் அறிக்கை எழுதினாலும் நம்முடைய அறிக்கையை கடைசியாக போடுவது என்கிற ஒரு நிலையை, விதியை வாடிக்கையாகக் கொண்டு இருக்கிற சமூகக் கட்டமைப்புடன் போராடிக் கொண்டு இருக்கிறோம். எந்த சீனியாரிட்டியும் அவர்களுக்கு கிடையாது. சமூக மதிப்பீடுகள் அப்படி இருக்கின்றன” என வேதனை தெரிவித்தார் திருமாவளவன்.