விசாரணைக்கு நேரில் ஆஜராக வருமானவரித்துறை நெருக்கடி – டி கே சிவகுமார்
தமிழக வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணைக்கு நேரில் ஆஜராக எனக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள். பாஜக அரசால் விசாரணை அதிகாரிகளின் நெருக்கடியை தாங்கிக் கொள்ள முடியாமல் எனது நண்பர்கள் வெளிநாடு சென்றுவிட எண்ணுகின்றனர் டி கே சிவகுமார்
பெங்களூருவில் இன்று பத்திரிக்கையாளர்கள் சந்திப்பை நடத்திய காங்கிரஸ் கட்சி தலைவர் டி கே சிவகுமார் ஏற்கனவே பலமுறை தனது வீடு மற்றும் தொழில் நிறுவனங்கள் மீது வருமான வரித்துறை, அமலாக்கத்துறை என பல்வேறு துறைகள் சோதனைகள் செய்து பலதரப்பட்ட விசாரணைகள் நடத்திய பிறகு கடந்த வாரம் மீண்டும் சென்னையில் இருந்து வந்த ஒரு வருமான வரித்துறை குழு தன் சார்ந்த இடங்களில் சோதனை செய்ததாகவும் அதன் பிறகு தன்னை விசாரணைக்கு நேரில் ஆஜராக நெருக்கடி கொடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.
தற்பொழுது தேர்தல் சமயம் என்பதால் தான் தற்பொழுது விசாரணைக்கு நேரில் ஆஜராக முடியாது என்பதை அவர்களுக்கு சட்ட ரீதியாக தெரிவிக்க உள்ளதாக கூறிய அவர் பாஜக தன்னிடம் உள்ள அனைத்து விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி தொடர்ந்து தனக்கு பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வருவதாக குற்றம் சாட்டினார்.
தனக்கு மட்டுமில்லாமல் தனது நண்பர்களுக்கும் தொடர்ந்து கொடுக்கப்படும் நெருக்கடியின் காரணமாக அவர்கள் இந்த ஊரை விட்டு விட்டு எங்கேயாவது வெளிநாடு சென்று விடலாமா என்று எண்ணும் அளவிற்கு இந்த நெருக்கடிகள் உள்ளது என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
தேர்தல் சமயத்தில் கர்நாடக காங்கிரஸ் கட்சி தலைவர் மாநிலம் முழுவதும் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட உள்ள நிலையில் அவர் விசாரணைக்கு நேரில் ஆஜராக வருமான வரித்துறை நெருக்கடி கொடுத்து வருவது தேர்தல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு பல்வேறு தலைவர்களும் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.