தஞ்சாவூருக்கு செல்லும் துணைமுதல்வர் உதயநிதியை வரவேற்க கோயில் பணம் செலவிடப்படுகிறதா?ஏதாவது ஒரு இடத்தில் நிரூபிக்க செல்லுங்கள், அப்படி ஏதாவது நடந்திருந்தால் நடவடிக்கை எடுக்க தயாராக இருக்கிறோம் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
வட சென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் சென்னையில் இயங்கி வரும் பல்வேறு அரசு நூலகங்களை மேம்படுத்தி, பகிர்ந்த பணியிடம் (Co-working Space) மற்றும் கல்வி மையம் அமைப்பதற்காக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு களஆய்வு மேற்கொண்டார்.
எழும்பூர் தொகுதி, சூளை, இராட்லர் தெருவில் உள்ள கிளை நூலகம், திரு.வி.க. நகர் தொகுதி, புளியந்தோப்பு, வெங்கடேசபுரம் புதிய காலனி கிளை நூலகம், இராயபுரம் தொகுதி, புதிய வண்ணாரபேட்டை, மொட்டை தோட்டம், சிந்தனை சிற்பி சிங்காரவேலர் கிளை நூலகம் ஆர்.கே. நகர் தொகுதி, பழைய வண்ணாரப்பேட்டை, மேயர் பாசுதேவ் தெரு கிளை நூலகம் மற்றும் புதிய வண்ணாரப்பேட்டை, ஜீவா நகர் நூலகம், பெரம்பூர் தொகுதி, கொடுங்கையூர், எருக்கஞ்சேரி நூலகம், துறைமுகம் தொகுதி, ஜார்ஜ் டவுன், சண்முகம் தெரு கிளை நூலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
முன்னதாக திரு.வி.க. நகர் தொகுதி, புளியந்தோப்பு, வெங்கடேசபுரம் புதிய காலனி கிளை நூலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு,
கொளத்தூர் பகுதியில் நேற்றைக்கு முதல்வர் ”படைப்பகம்” திட்டமிட்டு தொடங்கப்பட்டது, இந்த ஆண்டு சட்டமன்ற அறிவிப்பில் சென்னை மாநகரத்திற்குட்பட்ட 10 இடங்களில் சுமார் 20 கோடி ரூபாய் செலவில் படிப்பதற்கும் பணியிட பகிர்வு மையமாக 30 கோடி ரூபாய் ,50 கோடி ரூபாயில் பத்து நூலகங்களுக்கு உண்டான இடங்களில் நூலகத்தின் தரத்தையும் படிக்கின்ற பகிர்ந்து பணியிடத்தையும் ஏற்படுத்தி தருவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம் என்று அனைத்து நூலகங்களையும் டிசம்பர் 2025ஆம் ஆண்டிற்குள் கட்டி முடிப்பதற்கும் திட்டமிடப்பட்டு இருக்கிறது. மக்கள் பொருளாதார முன்னேற்றத்திற்கும் கல்வி முன்னேற்றத்திற்கும் அதிக கவனம் செலுத்த தமிழக முதல்வர் உத்தரவிட்ட நிலையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த மாத இறுதிக்குள் முடிச்சூர் ஆம்னி பேருந்து நிலையம் மக்களுடைய பயன்பாட்டிற்கு வரும், அந்த பேருந்து நிலையத்தில் 120 பேருந்துகள் நின்று சொல்லக்கூடிய வகையில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஓட்டுனர்கள் நடத்துனர்கள் தங்குவதற்கான இடங்கள், கழிப்பிட வசதிகள், உணவகங்கள் பாதுகாப்பான குடிநீர் என பேருந்து நிலையம் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆம்னி பேருந்து ஓட்டுநர்களுக்கும், உரிமையாளர்களுக்கும் வரப்பிரசாதமாக இப் பேருந்து நிலையம் அமையும் என்றார்.
தொடர்ந்து இந்துசமய அறநிலையத்துறை சார்பில் மாணவர்கள் பங்கேற்ற கந்தசஷ்டி பாராயணம் தொடங்கி வைத்தது விமர்சனத்திற்கு உள்ளனாது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் சேகர்பாபு, கந்தசஷ்டி கவசம் கேட்பவர்களும் பொதுமக்கள் தான் எனவே வசை பாடுபவர்களை பற்றி எங்களுக்கு கவலை கிடையாது. மக்கள் நலனுக்கு எவை உகந்ததோ அதை செய்து கொண்டிருக்கிறோம். இந்த ஆட்சி வசைப்பாடுகளை பற்றி கவலைப்படாது, வசை பாடுபவர்களும் வாழ்த்துகின்ற அளவிற்கு எங்களுடைய மக்கள் பணி முதல்வர் அவர்களால் நடந்து கொண்டிருக்கிறது என்றார்.
மேலும், தஞ்சாவூருக்கு செல்லும் துணைமுதல்வர் உதயநிதியை வரவேற்க கோயில் பணம் செலவிடப்படுகிறது என்ற எச்.ராஜா வின் கருத்துக்கு பதில் அளித்த அவர்,
எச்.ராஜா காலையில் எழுந்தால் இரவு வரை இந்த ஆட்சியின் மீது பொல்லாங்கு பேசுவதையே வாழ்க்கையாக கொண்டுள்ளார். ஏதாவது ஒரு இடத்தில் அவரை நிரூபிக்க செல்லுங்கள், அப்படி ஏதாவது நடந்திருந்தால் நடவடிக்கை எடுக்க தயாராக இருக்கிறோம்.எச்.ராஜா கூறுவது அபத்தமானது ஆட்சியின் மீது குறை சொல்வதற்கு எதுவும் இல்லை என்ற காரணத்தினால் இது போன்ற குறைகளை எடுத்துக் கொண்டிருக்கிறார்.
நாள் ஒரு மேனியும் பொழுதொரு வண்ணமும் பொய் சொல்வது புகார் சொல்வது தான் எச்.ராஜாவின் வாடிக்கை அதனால் தான் அவரை தமிழ்நாட்டின் பாஜக பொறுப்பாளராக வைத்துள்ளனர் என சாடினார்.
மேலும், நடிகை கஸ்தூரி குறித்து சொல்லுகின்ற ஆளைப் பொருத்துதான் கருத்துக்களுக்கு உண்டான வலு சேர்க்கப்படும், அதுபோன்ற கருத்துக்களை சொல்பவர்கள் யார் என்று சிந்தியுங்கள், நீரோட்டத்தில் அடித்து செல்பவர்கள், பெருமழை பெய்தால் எப்படி குப்பை அடித்து செல்லுமோ அதற்கு உண்டான தகுதி உடையவர்களுக்கெல்லாம் பதில் சொல்லி கொண்டு நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்று அமைச்சர் சேகர்பாபு சாடினார்.