தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ராமதாசை வேலை இல்லாதவர் என கூறினார் என பாட்டாளி மக்கள் கட்சியினர் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். சில இடங்களில் பேருந்து கண்ணாடிகளை உடைத்து பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினார்கள். இந்த நிலையில் ராமதாஸ், அன்புமணிக்கு எதிராக எதிர்ப்பு குரல்கள் எழுந்து வருகின்றன.
இட ஒதுக்கீடு என்ற அஸ்திரத்தை உபயோகப்படுத்துவது ராமதாஸுக்கு வாடிக்கை. தேர்தலுக்கு தேர்தல் அணி மாறுவது, பணம் வாங்குவது தான் இவருடைய அரசியலே. ஜாதி அரசியலை தவிர மக்களுக்கான அரசியலை முன்னெடுக்காத அரசியல் தலைவர் தான் ராமதாஸ்.
முதல்வர் ஸ்டாலின் ராமதாசிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமா? ஏன்?? எதற்கு? என கேட்டால் முதல்வர் ராமதாசை அவமதித்து விட்டார் என கதறுகிறார்கள். ராமதாஸ் முதல்வரை ஒருமையில் பேசியதற்கு மன்னிப்பு கேட்டாரா? சமூகநீதி காப்பவர், மக்கள் மீது பேரன்பு கொண்டவர் என நினைத்த ராமதாஸ் இன்று பண ஆசையால் கட்சியை பாஜக-விடம் அடகு வைத்து இன்று தினமும் ஒரு வெற்று அறிக்கை கொடுத்து அசிங்கபட்டு நிற்கிறார்’’ என்றெல்லாம் ராமதாஸ் மீது விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வருகிறது.
வன்னியர் கூட்டமைப்பின் நிறுவனத்தலைவர் சி.என்.ராமமூர்த்தி, பணத்தை மட்டுமே பிரதான நோக்கமாக கொண்டு செயல்பட்டு வன்னியர் சமுதாயத்தை ஏமாற்றி வருபவர் ராமதாஸ்’’ என விமர்சித்துள்ளார். ‘‘கூட இருந்தவர்களையே தவிக்க விடுபவர்தான் ராமதாஸ். காடுவெட்டி குருவுக்கு மருத்துவச் செலவுக்குக் கூட உதவி செய்யாதவர்தான் ராமதாஸ். காடுவெட்டு குடும்பம் ராமதாஸிடம் சென்று, உதவி கேட்டபோது என்னிடம் உங்களுக்கு உதவ வழியில்லை என கைவிரித்து விட்டார். ராமதாஸ் பொய் சொல்வதில் படு கெட்டிக்காரர். ராமதாஸ் ஞாயிற்றுக்கிழமை வந்த தலைவர் சண்டே லீடர் தான் அவர். ராமதாஸ் குடும்ப நலம் மட்டுமே பேணுபவர்.இதை அறிந்து பாமகவில் இருக்கும் இளைஞர் வெறுப்போய் வேறு கட்சிகளில் இணைந்து வருகிறார்கள்’’ என்கிறார்.
ராமதாஸின் கீழ்த்தரமான அரசியல் குறித்து கடுமையாக விமர்சித்துள்ள வீரத்தமிழர் உரிமை பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் சிதப்பரம் கோ.வி.மணிவண்ணன், “மன்னிப்பு கேட்க வேண்டியது ராமதாஸ்தான்; ‘உன் அப்பன் வீட்டுச் சொத்தையா கேட்கிறோம்…’ என்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரைப் பார்த்து 86 வயது முதியவர் பேசலாமா? ‘அவருக்கு வேலையில்லை…’என்று முதலமைச்சர் சொன்னது மட்டும் தரக்குறைவான பேச்சா? உண்மை அதுதானே? அதிமுகவுடன் கூட்டணி வைப்பது தாயுடன் உறவு கொள்வதற்கு சமம் என்று மருத்துவர் ராமதாஸ் கூறினாரே? இது என்ன புனிதமான வார்த்தையா?
பின்னர் அதிமுகவுடன் கூட்டணி வைத்தாரே? இது கேவலமான செயல் அல்லவா? மருத்துவர் ராமதாஸை ஜெயலலிதா சிறையில் அடைத்தபோது, மன்னிப்பு கேட்டீர்களே? அப்போது இந்த அன்புமணி ராமதாஸ் எங்கே இருந்தார்? அப்போது இவர்களுக்கு அவமானம் ஏற்படவில்லையா?
ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது, மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு செய்ததாக வழக்கு தொடரப்பட்டதே? அதற்கு என்றைக்காவது அன்புமணி பதில் சொல்லியிருக்கிறாரா? அதிமுகவுடன் கூட்டணி சேரும் போதெல்லாம் பல கோடிகளை பேரம் பேசி பெற்றதாக பாமக மீது குற்றச்சாட்டு எழுந்ததே? அப்போதெல்லாம் உங்களுக்கு அவமானம் ஏற்படவில்லையா ?
அறிக்கை அரசியல் மட்டுமே நடத்திக் கொண்டிருக்கும் நீங்கள் வன்னிய மக்களுக்காக செய்த நல்லவற்றை பட்டியலிட முடியுமா? தேர்தல் நேரத்தில் பேரம் பேசவும், அதில் பலன் அடைய மட்டும் வன்னிய மக்களை பகடைக்காயாக பயன்படுத்துகிறீர்களே? இது உங்களுக்கு வெட்கமாக இல்லையா? கடந்த மக்களவை தேர்தலில் கடைசி வரை அதிமுகவுடன் பேரம் பேசிவிட்டு, இரவோடு இரவாக பாஜகவுடன் கூட்டணி அமைத்தீர்களே? இது எதற்காக என்று உங்களால் விளக்க முடியுமா அன்புமணி? இது கேவலமான விஷயம் என்று இன்றுவரை உங்களுக்கு தெரியவில்லையா?
வேலையில்லாமல் ராமதாஸ் அறிக்கை விடுகிறார் என்பது உண்மை தானே. மக்களின் வாயிலிருந்து வரும் வார்த்தைகளும் இதுதானே? இதில் எங்கே தரக்குறைவு வந்தது? வன்னியர் சமூக மக்களுக்கு துரோகம் செய்வது, சாதிய மோதல்களை ஏற்படுத்துவது போன்றவற்றுக்கு ராமதாஸும், அன்புமணியும் தான் முதலில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.