‘விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனை சீமான் சந்திக்கவே இல்லை. அவருடன் இருப்பது போல் படத்தை எடிட் செய்து கொடுத்ததே நான் தான்’ என திரைப்பட இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இலங்கையில் தனி ஈழம் கேட்டு போரிட்ட பிரபாகரனுடன் இருப்பது போல் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரு புகைப்படத்தை பயன்படுத்தி வருகிறார். இதுகுறித்து சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்த சினிமா இயக்குநர் ராஜ்குமார் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு சீமானின் உண்மை முகத்தை வெளிப்படுத்தி உள்ளது.
இதுகுறித்து சங்ககிரி ராஜ்குமார், “அப்போது நான் தனியார் தொலைகாட்சி சேனல் ஒன்றில் வேலை செய்துகொண்டிருந்தேன். அந்த காலகட்டத்தில் சீமானுக்கு நெருக்கமாக இருந்த ஒருவரும் அங்கு வேலை செய்துகொண்டிருந்தார். ஒருநாள் அவர் பிரபாகரனுடன் இயக்குநர்கள் மகேந்திரன் உள்ளிட்டோர் இருந்த புகைப்படங்களை ஒரு டிவிடியில் எடுத்துக் கொண்டு அலுவலகம் வந்தார். அதில் சீமானுடைய புகைப்படமும் இருந்தது. இந்த இரண்டு புகைப்படங்களையும் ஒன்றாக இணைத்து எடிட் செய்து வேண்டும் என்று என்னிடம் அவர் சொன்னார்.
அதை என்னால் முடிந்த அளவுக்கு சிறப்பாக நான் எடிட் செய்து கொடுத்திருந்தேன். அந்த புகைப்படத்தை கவனித்தீர்கள் என்றால் சீமானுக்கு நிழல் வைத்திருப்பேன். பிரபாகரனுக்கு நிழல் வைக்க மறந்திருப்பேன். அந்த நண்பரை பின்னாட்களில் நேரில் சந்தித்த போது, ‘அந்த புகைப்படம் வீட்டில் பிரேம் போடுவதற்கு என்று சொன்னீர்கள். ஆனால், அது இப்போது வேறு மாதிரி போய்க் கொண்டிருக்கிறதே’ என்று கேட்டேன். அதற்கு அவர், ‘நம்முடைய புகைப்படத்தால் ஒரு அரசியல் தலைவரை உருவாக்கியிருக்கிறோம். நல்ல விஷயம்தானே’ என்று கூறினார். இந்தப்புகைப்படத்தை வைத்து சீமான் உண்மைக்கு முரணாக சொல்லும் கதைகளை கேட்கும்போது எனக்கு கஷ்டமாக இருந்தது…
சீமான் நேரில் சந்தித்தாரா? அப்போது புகைப்படம் எடுத்தாரா என்றெல்லாம் என்னால் சொல்லமுடியாது.ஆனால் இந்த புகைப்படம் ஒரிஜினல் இல்லை என்பதை என்னால் சொல்லமுடியும்” எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக சங்ககிரி ராஜ்குமார் தனது எக்ஸ் பக்கத்தில் ‘இவர், அவரை சந்திக்கவே இல்லை. எதன் அடிப்படையில் சொல்கிறேன் என்றால்.. அந்த புகைப்படத்தை எடிட் செய்து கொடுத்தவன் என்கிற அடிப்படையில்’ என்று தெரிவித்திருந்தார்.
இதனை சமாளிக்கும் வகையில், சீமான் ஆதரவாளர்கள், ”2009 ஈழத் தமிழர் போராட்ட மேடையில் தமிழ்த் தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களுடனான சந்திப்பும் அவர் சொன்னதை செய்தும் காட்டியும் மேடையில் ஆர்ப்பரித்த சீமான். அண்ணன் சீமானின் வளர்ச்சியை, நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியை தாங்கமுடியாமல் பொய்யான பரப்புரையை செய்து வருகிறது திமுக. நேற்று வரை தலைவர் பிரபாகரனையும் விடுதலைப்புலிகளையும் போராட்டத்தையும் கொச்சைப்படுத்தியவர்கள் அவர் பற்றிய செய்திகள் போடாத ஊடகங்கள் இன்று சீமான் பிரபாகரன் சந்திப்பு நடக்கவில்லை என்று கட்டமைக்க விழுந்து விழுந்து அவர் படமும் செய்தியையும் போடுவதை பார்த்தால்..
அந்த சந்திப்பு தமிழக அரசியலை மாற்றித்தான்விட்டது… ஆம் அது எதிர்பார்த்த எதிர்விளைவை உருவாக்கிவிட்டது.
முதலில் திராவிட கூட்டம் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். இங்கே சீமான் பின்னால் நிற்கும் தம்பிகள் இந்த புகைப்படத்திற்காகவோ, அவர் தலைவரோடு இருந்ததற்காகவோ நிற்கவில்லை. இன்று தலைவர் பிரபாகரன் பெயர் தமிழகத்தில் பேசப்படுகிறது என்றால் அது சீமானின் உழைப்பு. தடையை உடைத்து பேசி நிறுவியது அவர்தான்” என முட்டுக் கொடுத்து வருகிறார்கள்.