அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தனது தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து செய்தியில் எடப்பாடி பழனிசாமியை தவிர்த்து விட்டு ஜெயலலிதாவின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளது கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அக்கட்சியின் பொதுச்செயலளர் எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்களை ஊடகங்களுக்கு தெரிவிக்கும் முக்கிய நபராக விளங்கி வருகிறார். குறிப்பாக அதிமுக – பாஜக இடையேயான கூட்டணி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு முறிந்தபோது நாள்தோறும் பாஜகவை கடுமையாக விமர்சித்தவர் ஜெயக்குமார். பாஜக உடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை; இப்போதும் இல்லை, எப்போதும் இல்லை என்று பலமுறை ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளார். மேலும், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருக்கும் வரை பாஜக உடன் அதிமுக எப்போதும் கூட்டணி வைக்காது என தெரிவித்திருந்தார். இந்த நிலையில், அண்மையில் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். இதன் காரணமாக ஜெயக்குமார் அதிருப்தியில் இருந்து வருவதாக கூறப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழகம் வந்த அமித்ஷா அதிமுக உடனான கூட்டணியை உறுதி செய்தார். அதேவேளையில் பாஜக உடனாக கூட்டணி குறித்து ஜெயக்குமார் இதுவரை எந்த கருத்தும் கூறாமல் மௌனம் காத்து வருகிறார்.
இந்நிலையில் தான் அவர் தமிழ்ப் புத்தாண்டு பிறப்பை ஒட்டி வெளியிட்டிருக்கும் வாழ்த்து பதிவு அவர் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் மீது அதிருப்தியில் உள்ளதை வெளிப்படுத்தி உள்ளது. கடந்தாண்டு ஈபிஎஸ் படத்துடன் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்திருந்த ஜெயக்குமார், இந்தாண்டு அதனை தவிர்த்து விட்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் படத்துடன் எக்ஸ் தளத்தில் வாழ்த்து செய்தியை பதிவிட்டுள்ளார். அதில், அம்மாவின் குருகுல மாணவனாய் அவர் வழியில் நின்று எல்லோருக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று ஜெயக்குமார் குறிப்பிட்டுள்ளார். அதிமுகவில் ஏற்கெனவே எடப்பாடி பழனிசாமியின் மீது முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது அவரது தீவிர ஆதரவாளரான ஜெயக்குமாரும் அதிருப்தியில் உள்ளாரா? என கேள்வி எழுந்துள்ளது.