”விருதுநகர் எனது கோட்டை. இங்கே என்னை எதிர்த்து யாரும் அரசியல் செய்ய முடியாது.போகிற போக்கில் எட்டி மிதித்துவிடுவேன். வெட்டி எறியவும் தயங்க மாட்டேன். சென்னயில் இருந்து கொண்டு பேசாதே… விருதுநகருக்கு வந்து பேசு. நான் யாருக்கும் கட்டுப்பட மாட்டேன். என்னை எதிர்த்து அரசியல் செய்யும் யாரும் கட்சியில் இருக்க முடியாது” என அதிமுக முன்னாள் அமைச்சர் மஃபா பாண்டியரஜனை கடுமையாக ஒருமையில் பேசி இருந்தார் அக்கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி. இது அதிமுகவில் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில், ராஜேந்திர பாலாஜியின் பேச்சைக் கண்டித்து இன்று நாடார் சங்கத்தினர் போஸ்டர் அடித்து ஊர் முழுவதும் ஒட்டி எச்சரிக்கை விடுத்துள்ளனர். கே.டி.ராஜேந்திர பாலாஜியைக் கண்டித்தும் மாஃபா பாண்டியராஜனுக்கு ஆதரவு தெரிவித்தும் விருதுநகரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த போஸ்டரில், “எங்கள் சமூக, படித்த பண்பாளர், அதிமுக முன்னாள் அமைச்சர், கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் மஃபா.பாண்டியராஜன் அவர்களை அவ மரியாதையாக பேசி, மிரட்டிய ராஜேந்திர பாலாஜியே! நாடார்கள் வாக்கு உனக்கும், உன்கட்சிக்கும் வேண்டாமா? நாவை அடக்கி ப்பேசு- காமராஜ் நாடார் சமூக அறக்கட்டளை விருதுநகர் மாவட்டம்” என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது.
இதனிடையே கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ”தான் மாஃபா.பாண்டியராஜனை விமர்சிக்கவே இல்லை என மறுத்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”தமிழகத்தில் எந்த கட்சி வளர்ந்திருந்தாலும் திமுக – அதிமுகவிற்கு தான் கிராமபுறங்களில் தனிப்பெருபான்மை இருக்கு. அதிமுகவை எதிர்க்கின்ற தகுதி திமுகவுக்கு தான் இருக்கு. அதேபோல் திமுகவை எதிர்க்கின்ற தகுதி அதிமுகவுக்கு தான் உண்டு” என்றார்.
அப்போது மாஃபஃ பாண்டியராஜனுக்கு மேடையிலேயே மிரட்டல் விடுத்தது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், “மாஃபா பாண்டியராஜனை நான் பேசியது குறித்த விவாகரத்தில் எந்த பிரச்சனையுமில்லை. அந்த விவாகரத்துக்கு முற்றுபுள்ளி வைக்கப்பட்டு விட்டது. நான் அவரை பற்றி பேசவே இல்லை” என பல்டியடித்துள்ளார் ராஜேந்திர பாலாஜி.