சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், இன்று சென்னை முகாம் அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்துபேசினார். அப்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டுப் பயணம் வெற்றிபெற கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்தார். அவருக்கு, முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இந்த சந்திப்பு குறித்து கமல்ஹாசன் வெளியிட்டுள்ள வலைதள பதிவில், முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தேன். முன்னரே ஒப்புக்கொண்ட பணிகளால் அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க விழாவில் கலந்துகொள்ள இயலவில்லை என தெரிவித்துள்ளார்.
நவீனத் தமிழகத்தை நிர்மாணித்தவரும், இந்திய அரசியலில் மாபெரும் சக்தியாக விளங்கியவரும், வாழ்நாள் முழுவதையும் தமிழுக்காகவும், தமிழர் நலன்களுக்காகவும் அர்ப்பணித்த வரலாற்று நாயகருக்கு சிறப்பான முறையில் நூற்றாண்டு விழா நடத்தி, முத்தாய்ப்பாக நாணயம் வெளியாக பெருமுயற்சி எடுத்த நண்பர், தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து பாராட்டு தெரிவித்ததாகவும், அவரது வெளிநாட்டுப் பயணம் வெற்றி பெற வாழ்த்தியதாகவும் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதில் அளித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கலைஞரின் நெஞ்சத்தில் தனக்கெனத் தனி இடம்பெற்றவரும் – என் மீது அளவற்ற அன்புகொண்டவருமான அருமை நண்பர் கமல்ஹாசன் வாழ்த்துக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.