டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான ஊழல் வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். மக்களவை தேர்தல் காலத்தில் ஒரு மாநிலத்தின் முதலமைச்சரை, ஒரு கட்சியின் தலைவரை சிறையில் வைத்திருப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது என்று நீதிமன்றத்தில் வாதிட்டனர்.
அதனை தொடர்ந்து கெஜ்ரிவாலுக்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய ஜூன் 1ம் தேதி வரை அனுமதி வழங்கியது. ஜூன் 2ம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் சரண் அடைய வேண்டும் என்று நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியது.
இந்நிலையில் உடல் நிலை காரணம் காட்டி மேலும் ஒரு வாரம் ஜாமீன் வழங்க வேண்டும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் சார்பில் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்ற நீதிபதி காவேரி பவேஜா அமர்வில் விசாரணை நடைபெற்றது.
போலியான மருத்துவ காரணங்களைக் கூறி அரவிந்த் கெஜ்ரிவால் வெளியே வர முயற்சிப்பதாக அமலாக்கத்துறை குற்றச்சாட்டியது.
சர்க்கரை அளவு அதிகரிக்கும் உணவுகளை வேண்டுமென்றே எடுத்துக் கொண்டு உடல்நிலை சரியில்லை என கூறிவருகிறார். அவரின் உடல் எடை 7 கிலோ வரை குறைந்துள்ளது என்பதெல்லாம் உண்மையல்ல.
திடீரென உடல் எடை குறைந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். 5 அடி 5 அங்குலம் உள்ள மனிதருக்கு 64 கிலோ எடை இருப்பது என்பது சராசரியான அளவுதான். டயாபடீஸ் என்பது அறிய வகை நோய் அல்ல. இந்தியாவில் 50% பேருக்கு அது உள்ளது. எனவே கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்க கூடாது என்று அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது.