”தமிழ்நாட்டில் எப்போதும் கனன்று கொண்டு இருக்கும் மொழிப்புரட்சியானது இப்போது இந்தியா முழுமைக்கும் தொடங்கிவிட்டது. இத்தகைய மொழிப்புரட்சிக்கும் தமிழ்நாடுதான் அடித்தளம் அமைத்து இருக்கிறது” என முரசொலி தலையங்கம் வெளியிட்டுள்ளது.
இந்தியா முழுவதும் பரவிய மொழிப்புரட்சி என்கிற தலைப்பில் முரசொலியில் வெளியாகியுள்ள தலையங்கத்தில், ”ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்துக்கான இரண்டாயிரம் கோடி நிதியைத் தர வேண்டுமானால், மும்மொழித் திட்டத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், அதமமான நிபந்தனையை வைத்தார். ‘இந்தி மொழி ஆதிக்கத்தை ஏற்றுக் கொண்டால் தமிழ் நாடு பல நூற்றாண்டுகள் பின் தங்கிப் போகும். பத்தாயிரம் கோடி கொடுத்தாலும் அதனை ஏற்க மாட்டோம்’ என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முழங்கினார்கள். இது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் எதிரொலித்தது.
சி.பி.எஸ்.சி., ஐ.சி.எஸ்.இ., ஐ.பி. பள்ளிகளில் தெலுங்கு மொழி கட்டாயம் என தெலங்கானா மாநில அரசு அறிவித்தது. இவை அனைத்தும் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கல்வி நிறுவனங்கள் ஆகும். ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை தெலுங்கு கட்டாயமாக கற்பிக்கப்பட வேண்டும் என்றும் அம்மாநில அரசு அறிவித்தது.
பஞ்சாபில் உள்ள சி.பி.எஸ்.சி. உள்ளிட்ட அனைத்துப் பள்ளிகளிலும் பஞ்சாபி மொழி கட்டாயம் என்று அம்மாநிலத்தை ஆளும் ஆம் ஆத்மி கட்சி அறிவித்தது.
இப்படி ஒவ்வொரு மாநிலமாக அறிவித்த நிலையில், ‘இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்’ என்ற தலைப்பில் தொடர் கடிதம் எழுதத் தொடங்கினார் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். அதில் மிக முக்கியமான ஒரு செய்தியைக் குறிப்பிட்டு இருந்தார் முதலமைச்சர் அவர்கள்.
‘இந்தி மொழியை ஏற்றுக்கொண்ட பீகார் மாநில மக்களின் சொந்த மொழியான மைத்திலி, அந்த மாநிலத்தின் அடுத்தடுத்த தலைமுறையினர் அறிய முடியாதபடி வழக்கொழிந்தது’என்றும்,‘இந்தியாவின் பெரிய மாநிலம் உத்தரபிரதேசம். இந்திதான் அந்த மாநிலத்தின் தாய்மொழி எனப் பலரும் நினைப்போம். உண்மை அதுவல்ல. பல்வேறு தாய்மொழிகளை, மண்ணின் மைந்தர்களுடைய மொழிகள் அனைத்தையும் இந்தி என்கிற ஆதிக்க மொழியின் படையெடுப்பு சிதைத்துவிட்டது’என்றும், ‘ உத்தரப்பிரதேசம், பீகார், மத்திய பிரதேசம், ஜார்கண்ட், சட்டீஸ்கர், ஹரியானா, ராஜஸ்தான் என இந்தியை ஆட்சிமொழியாகக் கொண்ட மாநிலங்களின் பூர்வீக மொழிகள் சிதைக்கப்பட்டு, அழிக்கப்பட்ட நிலையில், அந்த மொழி பேசும் மக்களின் பண்பாட்டு விழுமியங்களும், இலக்கியச் செழுமைகளும், மரபார்ந்த அறிவுத்திறனும் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போயிருக்கின்றன’என்றும், ‘வடஇந்திய மாநிலங்களில் 25க்கும் மேற்பட்ட அந்தந்த மண்ணின் தாய்மொழிகளை கடந்த ஒரு நூற்றாண்டு காலத்தில் இந்தி – சமஸ்கிருதம் எனும் ஆதிக்க மொழிகளின் படையெடுப்பு சிதைத்திருக்கிறது’என்றும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அந்தக் கடிதங்களில் ஆதாரப்பூர்வமாக எழுதினார்கள். இந்த செய்திகள் சமூக ஊடகங்கள் மூலமாக வட மாநிலங்களில் பரவத் தொடங்கியதும், அங்குள்ள மக்கள் இதனை ஒப்புக் கொண்டு மறுமொழிகளை இட்டிருந்தார்கள்.
“நான் மைத்திலி மொழியைச் சேர்ந்தவள். ஆனால் என் பிள்ளைகளுக்கு அதனை கற்பிக்க என்னால் முடியவில்லை”என்று பீகாரைச் சேர்ந்த ஒரு பெண் பதிவு போட்டிருந்தார்.‘என்னுடைய மொழி மகாதி. ஆனால் இன்று அம்மொழி வருங்காலத் தலைமுறையினருக்கு புரியாத மொழியாகியுள்ளது. அதற்குக் காரணம் இந்தி மொழித் திணிப்புதான். தமிழ்நாடு முதலமைச்சர் சொல்வதை நான் வழிமொழிகிறேன்’என்று அவின் என்ற இளைஞர் பதிவு செய்துள்ளார். தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆங்கிலத்தில் அளித்த பேட்டிக்கு பின்னூட்டம் இட்ட வடமாநிலத்தவர் பலரும் இதே போன்ற எதிர்வினையைச் செய்துள்ளார்கள்.
ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு அவர்கள் அளித்த பேட்டியில், “உலகம் முழுக்க தமிர்கள் நல்ல பதவிகளில் இருக்கிறார்கள். ஆங்கிலம் படித்ததால் தான் அவர்கள் உலகம் முழுக்க கோலோச்சுகிறார்கள். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பதவிகளில் நாடு முழுவதும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் இருக்கக் காரணம் அவர்களது ஆங்கில அறிவு தான். ஆங்கிலத்தை முறையாகக் கற்றதால் தான் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் உள்ள உயர் நிறுவனங்களில் தமிழர்கள் இருக்கிறார்கள். எந்த நாட்டுக்குச் சென்றாலும் அங்கு முக்கியப் பதவிகளில் தமிழர்களைப் பார்க்கலாம்”என்று சொல்லி இருமொழிக் கொள்கையின் வெற்றியைச் சொல்லி இருந்தார்.
இருமொழி கொள்கைக்கு கன்னட வளர்ச்சி ஆணையம் ஆதரவு தெரிவித்துள்ளது. கர்நாடகாவில் இருமொழிக் கொள்கையை செயல்படுத்த வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் சித்தராமையாவுக்கு கன்னட வளர்ச்சி ஆணைய தலைவர் கடிதம் எழுதி உள்ளார். ‘கன்னட மொழியை பாதுகாக்க வேண்டுமானால் இருமொழி கொள்கையை பின்பற்ற வேண்டும்’ என்று கன்னட வளர்ச்சி ஆணையத் தலைவர் புருஷோத்தம் பிளிமலே தெரிவித்துள்ளார்.
இது ஏதோ எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலத்தில் மட்டுமல்ல, பா.ஜ.க. ஆளும் மகாராஷ்டிராவிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ‘மகாராஷ்டிரா வருபவர்கள் மராத்தி கற்றுக் கொள்ள வேண்டிய அவசியமில்லை’ என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மூத்த தலைவர் சுரேஷ் பையாஜி ஜோஷி சொன்னதும், அதனைக் கடுமையாக எதிர்த்தவர் அம்மாநிலத்தை ஆளும் பா.ஜ.க. முதலமைச்சர் பட்னாவிஸ்.‘மும்பை மற்றும் மராட்டியத்தின் மொழி மராத்தி. அனைவரும் மராத்தி கற்க வேண்டும். மராத்தி மொழியைப் பேச வேண்டும்’என்று சொல்லி இருக்கிறார் பா.ஜ.க. முதலமைச்சர் பட்னாவிஸ்.
சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே சொல்லி இருக்கிறார்: “ஆர்.எஸ்.எஸ். தலைவர் மீது தேசத் துரோக வழக்குப் பதிவு செய்ய வேண்டும். இவரது கருத்துகள் மும்பையைப் பிரிக்கும் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வின் திரைமறைவு காட்சிகளைப் பிரலிக்கிறது. அவர் மகாராஷ்டிராவில் இப்படி பேசி இருக்கிறார். குஜராத், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இப்படிப் பேசிவிட்டு பாதுகாப்பாக அவரால் திரும்பி வர முடியுமா?’’ என்று கேட்டிருக்கிறார்.
ஆம்! உண்மைதான்! பா.ஜ.க. செய்யும் மொழித் திணிப்பு என்பது இந்தியாவின் பன்முகத் தன்மையைச் சிதைக்கும் பிளவுவாத அரசியல்தான். அதனை இப்போது இந்தியாவே உணர்ந்து கொண்டு விட்டதன் அடையாளம்தான் பல்வேறு மாநிலங்களில் எதிரொலிக்கும் மொழி ஆதரவு மொழிகள்” எனக் கூறப்பட்டுள்ளது.