தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம் ஏற்பட்டுள்ளது. பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அந்த இடத்தில் மன்னார்குடி திமுக எம்எல்ஏ மற்றும் திமுகவின் ஐடி விங்க் நிர்வாகி நியமிக்கப்பட இருக்கிறார். திமுக ஆட்சிக்கு வந்து மூன்றாம் ஆண்டில் இந்த அதிரடி மாற்றம் நிகழ்ந்துள்ளது.
தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கப் போகிறது என்று கடந்த சில மாதங்களாகவே பேச்சு அடிபட்டு வந்தது . சில அமைச்சர்களுக்கு பதவி பறிப்பு இருக்கப் போகிறது என்றும் பேச்சு இருந்தது.
இந்த நிலையில் திமுக ஆட்சிக்கு வந்து இரண்டாம் ஆண்டு நிறைவு பெற்று மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் நிலையில் முதல்வர் மு. க. ஸ்டாலின் தமிழக அமைச்சரவையில் அதிரடியான மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார்.
திமுகவின் பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் இன்று ஆளுநரை சந்தித்து பேசப் போவதாக தகவல் வெளியானதிலிருந்து தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டிருப்பது உறுதியானது . அதன்படியே பால்வளத்துறை அமைச்சராக இருந்த ஆவடி நாசர் நீக்கப்பட்டு இருக்கிறார். அவருக்கு பதிலாக மன்னார்குடி எம்எல்ஏ டிஆர்பி ராஜா அமைச்சராக நியமிக்கப்பட உள்ளார். வரும் 11ஆம் தேதி டிஆர்பி ராஜா பால்வளத்துறை அமைச்சராக பதவி ஏற்க இருக்கிறார். ஆளுநர் ஆர். என்.ரவி அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க இருக்கிறார்.
அமைச்சர் ஆவடி நாசரின் பதவி பறிக்கப்படும் என்று தொடர்ந்து செய்திகள் வெளிவந்த நிலையில் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். இருந்தாலும் நாசரின் பதவி பறிப்புக்கான முழு காரணம் என்ன என்ற பரபரப்பும் சலசலப்பும் திமுகவினரிடையே எழுந்திருக்கிறது.