என்னை கொல்ல வந்தவர்களைக் கூட மன்னிப்பேன். கட்சிக்கு துரோகம் செய்பவர்களை மன்னிக்க மாட்டேன்,” என தி.மு.க., பொதுச் செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் உணர்ச்சிகரமாக பேசியது தி.மு.க-வினரிடையே பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
எதையும் மனதில் வைக்காமல் வெளிப்படையாக, நகைச்சுவை உணர்வோடு பேசுபவர் தி.மு.க சீனியர் துரைமுருகன். 1971ல் காட்பாடி தொகுதியில் போட்டியிட்டு வென்றவர் அடுத்தடுத்து தோற்றாலும் 8 முறை அத்தொகுதியில் வெற்றிபெற்று கோலோச்சி வருகிறார். 2021 சட்டசபை தேர்தலில் அவருடன் போட்டியிட்ட அதிமுகவை சேர்ந்த ராமு, திமுகவை சேர்ந்த துரைமுருகனுக்கு அரசியலில் வாழ்வா? சாவா? என்கிற பயத்தை ஏற்படுத்தினார். வெறும் 745 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே துரைமுருகன் வென்றார். இது அவருக்கு பெரும் மன வருத்தத்தை ஏற்படுத்தியது.
இதனையடுத்து வேலூர் மாவட்டம், காட்பாடியில் நடந்த தி.மு.க., ஓட்டுச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் துரைமுருகன் பேசிய துரைமுருகன், ‘‘தேர்தல் எப்படி நடக்கும், எப்படி வியூகம் வகுப்பார்கள் என்பது எனக்கு தெரியும். யாரும் என்னை ஏமாற்ற முடியாது. ஒருமுறை நான் ஏமாந்துவிட்டேன். அது கோவிட் காலத்தில் நடந்தது. அப்போது என்னால் வேகமாக வரவும் போகவும் முடியவில்லை. இல்லை என்றால் கண்ணில் விரலை விட்டு ஆட்டி இருப்பேன்.
சில துரோகங்களை எனக்கு நடத்தினார்கள். ஆனால், துரோகிகளை களையெடுத்துவிட்டு தேர்தலை வெற்றிகரமாக நடத்திக் காட்டும் ஆற்றல் துரைமுருகனுக்கு உண்டு. நான் யாரையும் மன்னிப்பேன். கட்சிக்கு துரோகம் செய்பவர்களை மன்னிக்க மாட்டேன். என்னையே கொல்ல வந்தால் கூட மன்னிப்பேன்.
60- 70 ஆண்டுகள் கட்சியை வளர்த்தவன் நான். ஆகையால் இது எனது கட்சி, நம்முடைய கட்சி என்ற புத்தியோடு இருப்பவன் நான். அந்த கட்சிக்கு துரோகம் செய்பவர்களை விட வேறு கொடுமை இருக்க முடியாது. போன முறை நான் எல்லோரும் நல்லவர்கள் என நினைத்து இருந்தேன். விளைவு சில பாடங்கள் கற்பிக்கப்பட்டது. அந்த பாடத்தை திரும்பி பார்க்க மாட்டேன்’’ என உணர்ச்சி மேலிடப்பேசினார்.