ஔரங்கசீப், ஔரங்கசீப்பின் கல்லறை தொடர்பான கூச்சல் குழப்பங்களுக்கு மத்தியில், பாஜக எம்பி பிரதீப் புரோஹித் நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி குறித்து கருத்து தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடியை சத்ரபதி சிவாஜி மகாராஜின் மறுபிறவி என்று பாஜக எம்.பி., கூறியதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் அவையில் அமளியில் ஈடுபட்டன. பிரதீப் புரோஹித் ஒடிசாவின் பர்கர் தொகுதியைச் சேர்ந்த பாஜக எம்.பி. ஆவார். அவரது பேச்சுக்கு காங்கிரஸ் உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்களும் கடுமையான ஆட்சேபனைகளைத் தெரிவித்தனர்.
பிரதீப் புரோஹித்தின் பேச்சு சர்ச்சையைக் கிளப்பியதால், அவைத் தலைவர் திலீப் சைகியா, அதை அவை நடவடிக்கைகளில் இருந்து நீக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆனால் மறுபுறம், பாஜக எம்.பி.யின் இந்தப்பேச்சு இப்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. பிரதீப் புரோஹித் சமூக ஊடகங்களில் கிழித்தெடுக்கப்படுகிறார். ”சத்ரபதி சிவாஜி எந்தக் கட்சியுடனும் தொடர்புடையவர் அல்ல, இந்த ஒப்பீடு பொருத்தமானதல்ல” என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
பாஜக எம்.பி., பிரதீப் புரோஹித் பேசும்போது, ”கந்தமாதன மலைப் பகுதியில் ஒரு துறவி வசிக்கிறார். அவர், கிரிஜா பாபா. அதே பாபா, என்னிடம் ஒரு முறை பேசும்போது, தற்போதைய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அவரது முந்தைய ஜென்மத்தில் சத்ரபதி சிவாஜி மகாராஜ் எனச் சொன்னார். இன்று பிரதமர் மோடியும் அவரைப் போலவே இந்தியாவை ஒரு சக்திவாய்ந்த நாடாக மாற்ற முயற்சிக்கிறார்” என்று கூறினார்.
பாஜக எம்.பி., பிரதீப் புரோஹித் இப்படிப்பேசியவுடன் சபையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. பாஜக எம்பியின் பேச்சை வீடியோவில் காங்கிரஸ் எம்.பி., வர்ஷா கெய்க்வாட் சமூக ஊடகங்களில் பகிர்ந்து, ”இது சத்ரபதி சிவாஜி மகாராஜை அவமதிக்கும் செயல்” என்று கூறினார். மகாராஷ்டிராவில் சிவ பக்தர்களின் அடையாளத்தை புண்படுத்த பாஜக தலைவர்கள் சதித்திட்டம் தீட்டி வருவதாக அவர் ட்விட்டரில் எழுதினார். பாஜகவினர் சிவனுக்கு எதிரானவர்கள். இந்த அவமானத்தை நாங்கள் ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம். அவர் விரைவில் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று வலியுறுத்தின் இருக்கிறார்.
காங்கிரஸ் உட்பட பல எதிர்கட்சிகளின் தலைவர்கள் அவரது பாஜக எம்.பியின் பேச்சுக்கு கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். சமூக ஊடகங்களிலும் மக்கள், பாஜக எம்.பி., மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர். ஔரங்கசீப்பின் கல்லறை தொடர்பாக வேண்டுமென்றே ஒரு சர்ச்சை உருவாக்கப்படுவதாக எதிர்க்கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இந்த சர்ச்சையின் மூலம் சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்த ஒரு சதி நடக்கிறது என குற்றம்சாட்டி வருகின்றனர்.